சனி, 9 ஏப்ரல், 2016

குறள் வழிக்கதைகள்---தெய்வமே துணை.

 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
 நெறி நின்றார் நீடு வாழ்வார் 

                     ஒரு கிராமத்தில் மணிவண்ணன் என்று ஒருவர் இருந்தார்.அவர் எப்போதும் இறைவனைப் பற்றியே எண்ணிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்.எப்போதும் இறைவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டும் கோவில்களுக்குப்  போய்க் கொண்டுமஇருப்பார்.யாரிடமும் இறைவனைப் பற்றியே பேசிக்கொண்டும் இருப்பார். 
              இவரது பக்தியைக் கண்டு புகழ்பவர்களும் உண்டு. பரிகசிப்பவர்களும் உண்டு.சிலர் இவரை வேஷதாரி என்றும் சொல்வதுண்டு. .மணிவண்ணரோ இது எதையும் காதில் போட்டுக் கொள்ளாது தன்  கடன் பணி  செய்து  கிடப்பதே என்று வாழ்ந்து வந்தார். ஒருநாள்  மணிவண்ணர் வழக்கம்போல் ஊர் எல்லையில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்குப் முன்னால் கோவிந்தன் சென்று கொண்டிருந்தான்.  .மணிவண்ணரும் கோவிலுக்குப் போய்விட்டு இறைவன் நினைவாகவே வந்து கொண்டிருந்தார்.
 கோவிந்தனுக்கு மணிவண்ணர்  ஒரு வேஷதாரி என்று எண்ணம்.இவருக்கு ஏதேனும்   துன்பம் நேர்ந்தால் அப்போதும் ஆண்டவனை நினைக்கிறாரா பார்ப்போம் என எண்ணி அவரை எப்படி சோதிப்பது என்று யோசித்தான்.அவன் அதிர்ஷ்டம் ஒரு சிறுவன் வாழைப் பழம் சாப்பிட்டுக் கொண்டு நின்றிருந்தான் அவன் கையிலிருந்த வாழைப்பழத் தோலை  தம்பி அந்தத் தோலை  பசுவுக்குப் போடுகிறேன் கொடு என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.பின்னர் சற்றுத் தொலைவு சென்று மணிவண்ணர் வரும் வழியில் அதைப் போட்டுவிட்டு மறைந்து நின்று கொண்டான்.அதே வழியில் நடந்து வந்துகொண்டிருந்த மணிவண்ணர்  கண்களில்  வாழைப்பழத் தோல் பட்டுவிட்டது. கண்ணில் பட்ட அந்தத் தோலை த் தாண்டிச் செல்லாமல் அங்கேயே நின்று' யாராவது வழுக்கிவிழுந்துவிடப் போகிறார்களே முருகா' என்றவாறே எடுத்து கொண்டு நடந்தார்.சற்றுத் தொலைவு சென்றபின் பசுமாடுகள் மேய்ச்சலுக்குப் போய்விட்டு வந்து கொண்டிருந்தன.ஒரு பசுவின் வாயில் அந்தத் தோலை கொடுத்துவிட்டு அதை வணங்கிவிட்டு நடந்தார்.
இதைப் பார்த்தபோதும் கோவிந்தனுக்குப் பொறாமை அடங்கவில்லை. என்ன நல்ல பக்திமான் வேஷம் என்று எண்ணிக் கொண்டான். ம்ம்.. அடுத்தமுறை எப்படியும் மாட்டிவைக்கிறேன் என்றுசொல்லிக்கொண்டான்.
சில நாட்கள் சென்றன.அன்றும் வழக்கம்போல் கோவிலுக்குப் போய்விட்டு வந்துகொண்டிருந்தார் மணிவண்ணர். தன்னையொத்த இளைஞர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த கோவிந்தனுக்கு மணிவண்ணர வருவதைப் பார்த்ததும் மூளை சுறுசுறுப் படைந்தது நண்பர்களிடம் ஆலோசித்தான்.அவனைப் போன்ற சிலர் கோவிந்தனை ஆமோதித்தனர்.ஆனால் சிவகுரு மட்டும் இதைத் தவறு என்று வாதாடினான்.
அவனிடம் இதெல்லாம் ஒரு விளையாட்டுக்குத் தானே என்று சமாதானம் செய்தான் கோவிந்தன்.ஆனாலும் சிவகுரு இந்த விஷப் பரீட்சைக்கு ஒப்புக் கொள்ளாமல் சென்று விட்டான். மற்றவர்கள் அங்கேயே நின்று அடுத்த சோதனைக்குத் திட்டம் தீட்டினர்.அந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒரு நாள் குறித்தனர்.
அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது.அன்று அமாவாசை தினம்.நல்ல இருட்டு.நடுஇரவு. ஒரு பயங்கரமான பேய் உருவம் மணிவண்ணரின் முன் வந்து நின்றது.அத்துடன் பயங்கர சத்தமும் கொடுத்தது.பெரும் பயங்கர சத்தம் கேட்டுக் கண் முழித்தவர் தன முன்னே பயங்கரப் பேய் நிற்பதைக் கண்டார்.ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டார்..முருகா முருகா எனக் கூவியவர் கந்த சஷ்டிக் கவசத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.சற்று நேரம் பேயாட்டமாடிக் கொண்டிருந்த பேயே களை,த்துவிட்டது. சற்றுநேரம் அமைதியாக நின்றது.
அப்போது இறைவன் அருளால் பயம் தெளிந்த மணிவண்ணர் பேயைப் பார்த்து "என்ன பாவத்தாலோ உனக்குப் பேயுருவம் வந்துவிட்டது போ போய் கோவிலின் முன்னே   நின்று வரும் பக்தர்களை தரிசித்துக் கொண்டிரு உனக்கு நல்ல மோட்சம் கிட்டும் போ. என்னிடம் வந்து என்ன பிரயோசனம்?"என்றார் கனிவோடு.
பேயுருக் கொண்ட கோவிந்தனுக்குத் தலை சுற்றியது. சற்று நேரத்தில் மணிவண்ணர் கோவிந்தா, கோவிந்தா என்று ஜபிக்கத் தொடங்கவே கோவிந்தன் அவரை ஒன்றும் செய்ய இயலாமல் அங்கிருந்து மறைந்தான்.வெளியே வந்து தன நண்பனிடம் ச்சே, இந்தமுறையும் இவரை  எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்தினான்.
அவர்கள் வேறு திட்டம் தீட்டியவாறே அங்கிருந்து அகன்றனர்.
மறுநாள் காலை கோவில் வாசலில் நண்பர்களுடன் நின்றிருந்த கோவிந்தனைக் கண்ட மணிவண்ணர் அருகே வந்தார். இவர் என் நம்மிடம் வருகிறார் எனப் புரியாமல் அவரைப் பார்த்தான் கோவிந்தன்.அருகே வந்தவர் புன்னகை புரிந்தவாறே "நான் சொன்னவாறே கோயில் முன்னின்று வரும் பக்தர்களைத் தரிசிக்கத் தொடங்கிவிட்டாயா ரொம்ப நல்லது."என்றதும் கோவிந்தனுடன் சேர்ந்து அவன் நண்பர்களும் திடுக்கிட்டனர். "கோவிந்தா, நேற்று இரவே நீதான் என்று கண்டு பிடித்துவிட்டேன்.அதனால்தான் முருகா முருகா என்று எப்போதும் கூப்பிடும் நான் கோவிந்தா கோவிந்தா என்று கூவினேன்." என்றபடி சிரித்தார்.
அவமானத்தில் தலை குனிந்தபடியே வேகமாக அங்கிருந்து அகன்றான் கோவிந்தன்.
ஆனாலும் அவன் மனதுள் மணிவண்ணரைப் பற்றிய எண்ணம் மாறவேயில்லை. எப்படியும் இவர் முகத்திரையைக் கிழித்தே தீருவேன் என மனதுக்குள் முடிவு செய்து கொண்டான்.

                                                                      (தொடரும்)







ருக்மணி சேஷசாயி
.Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com