ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மந்த்ராலய மகான் -9

            ஸ்ரீ ராகவேந்திரரை  நினைத்த மாத்திரத்தில் அனுக்ரஹம் செய்யும் கருணையுள்ளம் கொண்டவர் அந்த மகான். அவர் தேச சஞ்சாரம்  செய்யத் தொடங்கி கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு  தேவநகரம்  கமலாலயம் 
தரிசித்தார். தெற்கு நோக்கிப் பயணித்து பல ஊர்களைக் கடந்து  உடுப்பி க்ஷேத்ரம் வந்தடைந்தார்.உடுப்பி கிருஷ்ணனின் அழகில்  மெய்மறந்தார். இங்கு தங்கி பல நூல்களுக்கு வியாக்யானங்களும் விரிவுரைகளும் பாஷ்ய உரைநூல்களும் இயற்றினார்.அத்துடன் நியாயமுக்தாவளி
'சந்திரிகா பிரகாசிகா ' என்ற நூல்களையும்  முன்பே எழுதிய 'சுதா பரிமளத்தையும் ' ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணனுக்குஅர்ப்பணம் செய்தார்.
உடுப்பியில் ஸ்ரீராகவேந்திரர் பொன்னால் ஒரு சந்தானகோபால விக்ரகம் செய்து பூஜை செய்துவந்தார்.
பின் அங்கிருந்து புறப்பட்டு  மைசூரில் சிலகாலம் தங்கியபின் கிரீடகிரி என்னும் ஊர் வந்து சேர்ந்தார்.அந்த ஊரில் வேங் கிடதேசாய் என்பவர் வாழ்ந்து வந்தார்.அன்று அவர் இல்லத்தில் மூலராமர் பூஜையும்  பிக்ஷையும் 
நடத்த ஏற்பாடுகள் நடந்தன.
               சிறப்பாக ப் பூஜை நடக்கும் இடத்தில் தேசாயும் அவர் மனைவியும் பக்தியுடன் அமர்ந்திருந்தனர்.சமையற்கட்டில் சமையல் ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.தேசாயின் மூன்று வயது மகன் விளையாடிக் கொண்டே சமையற்கட்டுக்குப் போனவன் தடுமாறி பெரிய அண்டாவில் விழுந்தான்.அதில்  மாம்பழ ரசம் நிறைந்திருந்தது. அதில் விழுந்த குழந்தை உயிரிழந்தது.சற்று நேரத்தில் அங்கு வந்த தேசாயின் மனைவி தன மகன் இறந்து மிதப்பது கண்டு பதறினாள் கதறினாள். அங்கு வந்த தேசாய் செய்தியறிந்து துடித்தார்.இருவரும் சேர்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர். 
.
          அப்போதுதான் மூலராமர் பூஜை முடிந்துள்ளது.அனைவருக்கும் சாப்பாடு போடவேண்டிய நேரம்.வெளியில் விஷயம் தெரிந்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள் என்ன செய்வது என கையைப் பிசைந்தவர்  ஒரு முடிவுக்கு வந்தவராய் தன மகனின் உடலைத் தூக்கினார் . அங்கிருந்த பெரிய இலைக் கட்டினுள் வைத்து மூடினார் அதை வேறு அறைக்குள் வைத்து மூடிவிட்டு பூஜையில் வந்து நின்று கொண்டனர் 
 
எல்லோருக்கும் தீர்த்தம் வழங்கிய ராகவேந்திரர் தேசாயிடம் உங்கள் மகனையும் அழைத்து வாருங்கள்.அவனுக்கும் தீர்த்தம் வழங்க வேண்டும்.என்றபோது துக்கம் பீறிட அழுது நின்றனர் தம்பதிகள்.
நடந்ததை அறிந்த ராகவேந்திரர் 'குழந்தையைத் தூக்கி வாருங்கள்' என்று சொல்லவே தேசாய் தன மகனைத் தூக்கிவந்து அவர்முன் கிடத்தினார்.
             புன்னகையுடன் தீர்த்தத்தை வேகமாக அச்சிறுவன்  மீது புரோக்ஷிக்க அவன் மெதுவாகக் கண் திறந்தான்.பெற்றோர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.தேசாய் அந்த கிரீடகிரி கிராமத்தையே காணிக்கையாக்கினார்.அங்கு கூடியிருந்த மக்கள் அவரது பெருமையைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர்.
இன்னும் எத்தனை எத்தனையோ மகிமைகள் சொல்லச் சொல்ல வளரும்.
                                                                         (தொடரும் )







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com