சனி, 28 செப்டம்பர், 2013

பழமொழிக் கதைகள் ---கிட்டாதாயின் வெட்டென மற

வீரன்பட்டி வீரன்பட்டி என்று ஒரு சிறு கிராமம்.அந்த கிராமத்தில் வீரையன் என்று ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான்.அவனுக்கு பாலன், கோபு என்று 

இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.வீரையனுக்கு இளம் வயதில் படிக்கவேண்டும் என்று நிறைய ஆசை இருந்தது. ஆனால் அவனால் படிக்க

முடியாத சூழ்நிலை.

அதனால் தனது இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைக்க விரும்பினான். ஒருநல்ல நாளில் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகே 

நகரத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்றான்.இருவரையும் பள்ளியில் சேர்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

சில மாதங்கள் பிள்ளைகள் ஒழுங்காகப் பள்ளி சென்று வந்தனர்.

பள்ளியில் காலாண்டுத் தேர்வு வந்தது.கோபு பாலன் இருவரின்  ஆசிரியர் அவர்களுக்கு தரச் சான்றிதழ் எனப்படும் ப்ரோக்ரஸ் ரிபோர்ட் கொடுத்தார்.
இருவருமே சுமாரான மதிப்பெண்ணே பெற்றிருந்தனர்.இதைத் தந்தையிடம் கொடுப்பதற்கு மிகவும் பயந்தனர்.ஆனால் சிறியவன் கோபு தன தந்தையிடம் தன சான்றிதழைக் கொடுத்து அவர் முன் தயங்கியபடியே நின்றான்.அவன் எடுத்திருந்த மதிப்பெண்கள் எல்லாமே சராசரிக்கும் கீழேயே இருந்தன.வீரையனுக்கு ஒரே கோபம்.மூத்தவனாவது நல்ல மதிப்பெண் எடுத்திருப்பானோ என்று பாலனைக் கேட்டான்."ஏண்டா, தம்பி எல்லாத்திலையும் குறைச்ச மார்க்கு வாங்கியிருக்கிறானே, நீ எப்படி?"
தயங்கியபடியே தன ரிபோர்டைக் கொண்டுவந்து கொடுத்தான் பாலன்.அதைப் பார்த்த வீரையன்,"தம்பியைவிட பரவாயில்லை. ஆனாலும் நல்லாப் படிக்கோணும்டா" என்று சற்றுக் கடுமையாகக் கூறினான்.இருவரும் சரியெனத் தலையை ஆட்டினர்., 
நாட்கள் செல்லச் செல்ல கோபுவுக்குப் படிப்பின் மீது நாட்டமே இல்லாமல் போயிற்று.அவன் அண்ணன் பாலன்  அவனிடம் தந்தையின் ஆசை பற்றிச் சொல்லி அவனைப் பள்ளிக்கு இழுத்து வந்தான்.
அன்றும் பாலன் பள்ளிக்குப் புறப்பட்டு விட்டபோதும் கோபு கன்றுக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.அவனிடம் வந்த பாலன் "டே,தம்பி என்னடா, பள்ளிக்கூடம் வரலையா?"என்று கடுகடுப்போடு கேட்டான். அதைக் கேட்ட கோபு "எனக்குதான் படிப்பே ஏறலியே நான் 
ஏன் பள்ளிக்கூடம் வரணும்? நீ வேணுமானா போ. நான் வரலை" என்றான்..
அதைக் கேட்டபடியே வந்த வீரையனுக்குக் கோபம் மூண்டது."ஏண்டா, உங்களை எப்படியாவது படிக்கவைக்க நான் படாத பாடு படுறேன் உனக்கு வெளையாட்டா இருக்காடா? மருவாதையா அண்ணன்கூடப் போற வேலையைப் பாரு. இல்லேயின்னா..."என்று பற்களைக் கடித்தான் வீரையன்.அவனது கோபத்தைப் பார்த்த கோபு உடனே தன புத்தகப் பையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு பள்ளியை நோக்கி வெளியே ஓடினான்.
அன்று மாலையே அழுதபடியே வீட்டுக்கு வந்த கோபு தன தந்தையிடம் வந்து நின்றான்."அப்பா, உங்களுக்குப் பிடிக்குதுன்னு என்னைப் பள்ளிக்கூடம் போகச் சொல்றீங்களே எனக்கு படிப்பு வருதான்னு பாக்க வேண்டாமா?இன்னிக்கு எங்க வாத்தியாரு என்ன சொன்னாரு தெரியுமா? எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடாதேடா வராத படிப்பை நினைச்சு  ஏன் வீணா கஷ்டப் படுறே"அப்படின்னு சொல்லித் திட்டுறாங்கப்பா.நான் உங்க கூட வயலுக்கு வந்து விவசாயத்தைப் பாத்துக்குறேன்.அண்ணனுக்குப் புடிச்சா அவன் படிக்கட்டும்."
வீரையன் சற்று சிந்தித்தான்.அவன் மனம் பேனா பிடிக்க ஒரு கை போனால் ஏரைப் பிடிக்க ஒரு கை இருக்கட்டும் என்று எண்ணினான்.
"சரிகோபு, நீ என்கூட வயலுக்கு வா."என்றவுடன் மகிழ்ச்சியுடன் ஓடினான் கோபு.
                               வருடங்கள் ஓடின. இன்று பாலன் கல்லூரியில் படிக்கும் மாணவன்.ஆனால் கோபுவோ வயலில் பாடுபட்டு விளைச்சலைப் பெருக்கி வீட்டின் செல்வ நிலையையும் உயர்த்தியிருந்தான். முதுமையின் விளிம்பில் நிற்கும் வீரையன் தனக்கு பெரும் உதவியாக இருக்கும் கோபுவைப் பற்றிப் பெருமை கொண்டிருந்தான். பலவிஷயங்களைத் தெரிந்து கொண்டு இன்னும் சிறப்பான முறையில் தன நிலத்தைப் பாதுகாக்கவும் விளைச்சலைப் பெருக்கவும் முயன்றான். தினமும் நூல்நிலையம் சென்று விவசாயம் சம்பந்தமான நூல்களைப் படித்தான்.பொது அறிவையும் வளர்த்துக் கொண்டான். 
அடிக்கடி தந்தையின் சந்தேகங்களைப் போக்கவும் அவன் அறிவை எண்ணி வீரையன் ஆச்சரியப் பட்டான்.
                                 பாலன் கஷ்டப் பட்டு கல்லூரிப் படிப்பை  முடித்தான்.ஆனால்வேலைக்காக அலைவதே அவன் வேலையாக இருந்தது.
ஆனால் கோபுவோ நிற்க நேரமின்றி வயல் வேலை என்று ஓடிக்கொண்டிருந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு மாவட்டக் கலெக்டர் வருகை புரிந்தார்.அவ்வூர் அதிகாரிகள் கூடியிருக்கும் கூட்டத்தில் வீரையன் பெருமைப் படும் ஒரு காரியத்தைச் செய்தார்.ஊரே கூடியிருக்கும் அந்த இடத்தில் சிறந்த விளைச்சலைக் காட்டிய கோபுவுக்கு நமது குடியரசுத் தலைவர் பாராட்டும் பரிசும் அளிக்க இருக்கிறார் என்ற செய்திதான் அது.ஊர் பெரியவர் முதல் அனைத்து மக்களும் சிறந்த மகனைப் பெற்ற தந்தை என்று பாராட்டிப் புகழ்ந்தனர்.
அன்று இரவு வீரையன் தன பிள்ளைகள் இருவருடனும் அமர்ந்து கொண்டான்.
"கோபு, உன் அண்ணன் படிக்கப் போனபோது நீயும் போகலையேன்னு கோபப்பட்டேன். ஆனால் நீயோ வாத்தியாரு ஏதோ சொன்னாருன்னுட்டு படிப்பை நிறுத்திட்டே, நீ உருப்படுவியான்னு கவலைப் பட்டேன். ஆனா, அந்தக் கவலை இப்போ இல்லை."
"அப்பா, வாத்தியாரு ஏதோ சொல்லலைப்பா, வாழ்க்கைக்குத் தேவையான பழமொழியைத் தான் சொல்லியிருக்காரு.
கிட்டாதாயின் வெட்டென மற அப்படின்னு." அவரு சொன்னபடி எனக்கு வராத படிப்பை நினைச்சு நான் வருந்தாம அதை மறந்துட்டு நமக்கும் நாட்டுக்கும் எது தேவையோ அதைக் கத்துக்கிட்டேன்.அந்த விவசாயம் நம்மையும் உசத்தி நாட்டையும் உசத்திடுச்சில்லெப்பா?"
முகத்தில் புன்னகை மாறாமல் நின்ற பாலனும் "என்னோட கல்வி அறிவையும் பயன் படுத்தி தம்பிக்கு உதவியா நான் இருப்பேன் அப்பா."
என்றவுடன் அவனையும் சேர்த்து அனைத்துக் கொண்டு மகிழ்ந்தான் வீரையன்.
            அதனால் நம்மால் முடிந்ததை முயன்று கற்கவேண்டும் இயலவில்லையேல் அதைமறந்துவிட்டு இயன்றதைத் தெரிந்து கொண்டுஅதிலும் வெற்றி அடைவதே நம் குறிக்கோளாக இருக்கவேண்டும்.
















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com