வெள்ளி, 28 டிசம்பர், 2012

anumaan


-
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

101-ஆழி கடந்தான் வாழி.


இதிகாச நாயகனான் ஸ்ரீராமபிரான் மனைவிசீதையைப் பிரிந்து அவளைத் தேடிக் கொண்டு வரும்போது ரிஷ்ய முகப் பர்வதம் என்னும் இடத்தில் 

ஆஞ்சநேயனைச் சந்திக்கிறான்.

இருவர் உள்ளங்களும் அன்பினால் இணைகின்றன அனுமா என அழைத்து அவனைத் தன அன்பு வலைக்குள் கட்டுகிறான் ராமன்.

சீதையைப் பற்றிக கூறி  அவளைத் தேடிக் கண்டுபிடித்து வர  அனுமனே ஏற்றவன் என முடிவு செய்து அவனிடம் அப்பணியை தருகிறான் ராமன். . 

வானர சேனை புறப்படுகிறது.ராமன் அவர்களிடம், வழியில் ஒரு பறவை கூறியதான செய்தியைக்  கூறுகிறான்.

"அனுமா, சீதையை தெற்குப் பக்கமாக ஒரு அரக்கன் தூக்கிச் சென்றதைக் கண்டதாக ஜடாயு என்னும் பறவைகூறியது .எனவே எல்லாப் பக்கமும் 

செல்லுங்கள்.ஆனால் தெற்குப் பகுதிக்கு அனுமன் செல்லட்டும்" எனக் கூறினான்.

வானரங்கள் எல்லாம் ஆரவாரத்துடன் புறப்பட்டன.தெற்குப் பகுதிக்குச் செல்ல அனுமன் கடற்கரையில் வந்து நின்றான்.பெரிய கடல்.இதைத் தாண்ட 

வேண்டுமே.என்னால் எப்படி முடியும் இதைத் தாண்டிச் செல்லக் கூடிய வலிமை என்னிடம் உள்ளதா?எனச் சிந்தித்தவாறு நின்று விட்டான் அனுமன்.

அப்போது ஜாம்பவான் என்ற கரடிராஜா அனுமனைப் பற்றி அறிந்தவர் அவனது பண்பு நலன்களைக் கூறுகிறார்.இளம் வயதில் அனுமான் விளையாட்டுப் பிள்ளையாக ரிஷிகளைத் தொல்லைப் படுத்தி வந்தான். அதன் பயனாக ரிஷிகள்  அவனது பலம் அவனுக்கு மறந்து போகும். யாரேனும் நினைவு படுத்தினால்தான் அவனுக்கு அது மீண்டும் பயன்படும் என்று சாபமும் அதன் விமோசனமும் கூறியிருந்தனர்.இதனை அறிந்தவர் ஜாம்பவான் மட்டுமே.
அதனால் கடலை எப்படிக் கடப்பது என்று சோர்ந்திருந்த அனுமன் முன்பு அவனைப் பற்றி கூறலானார்."அனுமா, மிகவும் பராக்கிரமம் வாய்ந்தவன் நீ.உன்னால் ஆகாத செயல் என்று ஒன்றும் இல்லை."எனப் பலவாறு கூற அனுமன் நிமிர்ந்து நின்றான். அவன் பலமும் திறமையும் அவனுக்குப் புரிபடலாயிற்று.தேவர்கள் பல வரங்களை அளித்ததும் கடைசியில் பரமேஸ்வரன் சிரஞ்சீவி எனக் கூறியதும் அனுமனின் நினைவுக்கு வர 
தான் ஒருவனல்ல.தேவர்களின் தொகுப்பே நான் என்ற எண்ணம் எழ புதிய பலத்தோடு எழுந்தான் அனுமன்.ஜாம்பவானை வணங்கினான்.தன்னை யாரெனக் காட்டிய மகானல்லவா அவர்!
தெற்கு நோக்கி அனுமனைச் செல்லப் பணித்த ராமன் அடையாளமாகக் கொடுத்த கணையாழியை பக்தியுடன் எடுத்து வணங்கிய அனுமன்
இனியும் தாமதித்தல் தகாது என எண்ணி சூரியனையும் தன தந்தையான வாயுவையும் வணங்கினான் .அடுத்த கணம் அவன் உடலுக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டது.ஆகாயத்தை நோக்கி பறந்தான் அனுமன்.
ராமபாணம் எப்படிப் பறக்குமோ அப்படிப் பறந்து கொண்டிருந்தான் அனுமன்.அப்போது கடலின் நடுவே இருந்து ஒரு பெரிய மலை அவன் முன்னே தோன்றி அவனது வழியை மறித்தது.அனுமன் திகைத்து நின்றான்.
மைனாகமலை என்ற பெயர் கொண்ட அந்த மலை அனுமனைப் பார்த்துப் பேசியது."அனுமா, ராம காரியமாகப் போகிறாய் நீ என்பது எனக்குத் தெரியும்.இந்திரனிடமிருந்து நான் தப்பிக்க உன் தந்தை ஒரு சமயம் உதவி புரிந்தார்.அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு உனக்கு நான் உதவ எண்ணுகிறேன்.களைத்திருக்கும் நீ என்மலையில் சற்று நேரம் ஓய்வெடுத்துச் செல்,உன்மேனி என்மீது படுவதால் நானும் ராமனுக்கு உதவியவனாவேன்." என்ற மைனாகமலையின் சொற்களைக் கேட்டு அனுமன்,"மைனாகபர்வதமே, உன் சொல் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் ராமகாரியத்தை முடிக்கும் வரை எனக்கு களைப்பே ஏற்படாது உன் உபசரிப்புக்கு மிக்க நன்றி" எனக் கூறி "திரும்பி வரும்பொழுது உன் சொற்படி நடப்பேன். இப்போது என்னைப் போக விடுக"என்றான்.
மைனாகபர்வதத்தினால் அதற்குமேல் அனுமனைத் தடுக்க  இயலாமல் போகவே  மேலே போக விடுத்தான்.மீண்டும் வேகமெடுத்துப் பறந்தான் அனுமன்.ஒரே சீரான வேகத்தில் பறந்த அனுமனின் முன் ஒரு அரக்கி தன கோர உருவத்தோடு காட்சியளித்தாள்.பெரும் புதர் போன்ற தலைமயிரும். பெரும் மைதானம் போன்ற நெற்றியும்,இரண்டு குளங்களைப் போன்ற கண்களும், மரத்தின் தண்டு போன்ற மூக்கும், பெரிய குகை போன்ற வாயும் அவளைப் பார்க்கவே அருவருப்பாகவும் அச்சமாகவும் இருந்தது. அவள்தான் சுரசை என்னும் அரக்கி.
வேகமாகப் பறந்து கொண்டிருந்த அனுமான் தன வேகத்தைக் குறைத்து அவள் முன் நின்றான்.
"ஏ  அரக்கியே, என்னை ஏன் தடுக்கிறாய்?ராமகாரியமாக நான் செல்வதைத் தடுக்கும் நீ  யார்?"
"எனக்குப் பசிக்கிறது உன்னைத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்ளப் போகிறேன் " என்ற அந்த அரக்கி தன வாயை மிகவும் பெரிதாகத் திறந்தாள்.அனுமனும அவள் வாயை விடப் பெரிதாக வளர்ந்தான். திடீரெனத் தன உருவத்தை ஒரு கட்டைவிரல் அளவு சுருக்கிக் கொண்டுஅரக்கியின் வாய் வழியே உள்ளே நுழைந்து மூக்கின் வழியே வெளியே வந்து குதித்தான்.
சற்று நேரத்திற்குள் நடந்த நிகழ்ச்சியை அறிந்த சுரசை "வாயுகுமாரா உன் திறமையை மெச்சினேன்.உன் ஆற்றலை அறியவே நான் இவ்வாறு வந்தேன்.நீ செல்லும் காரியம் வெற்றி பெறும்.இனித் தொடர்ந்து செல்வாயாக" என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தாள். அந்த சுரசை.
அவளிடமும் வரம் பெற்று தொடர்ந்து பறந்தான் அனுமன்.
இனி ஏதும் தடை வராது என்று எண்ணியவனது வேகம் தடைப் பட்டது. விண்ணில் பறந்து கொண்டிருந்தவனின் நிழல் நீரில் விழ அந்த நிழலைப் பற்றி இழுத்தாள் சிம்ஹிகை என்ற அரக்கி.அவள் இலங்கையைச சுற்றியுள்ள கடல் பகுதியைக்  காவல் காக்கும் அரக்கி.ஒருவரின் நிழலையே பற்றி அந்த நிழலுக்குரியவரையே தன வசம் இழுத்து சம்ஹாரம் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்தவள்.
அனுமன் தன உயரத்திலிருந்து கீழே இறங்கி சிம்ஹிகையைப் பார்த்தான். சுரசையைப் போலவே மிகப் பெரிய வாயும் தலையுமாக மிகக் கோர ரூபத்தோடு காட்சியளித்தாள் சிம்ஹிகை.சுரசையிடம் காட்டிய அதே தந்திரத்தை இவளிடமும் காட்டுவோம் என முடிவு செய்து கொண்டான்.சிறு தும்பிப் பூச்சியளவு தன்னைச் சுருக்கிக் கொண்டு அவளின் தொண்டை வழியாக வயிற்றுக்குள் சென்றவன் அடுத்த நொடி உடலை மலையளவு ஆக்கிக் கொண்டு சுரசையின் உடலைப் பிளந்து கொண்டு வெளியே வந்தான்.அலறிக் கொண்டே உயிரை விட்டாள்  அந்த அரக்கி.
தொடர்ந்து பறந்தவன் முன் இலங்கை தென் படலாயிற்று.
மகிழ்ச்சியுடன் அம்மாநகரின் வாயிலில்உள்ள லம்ப பர்வதத்தின் மேல்  சென்று குதித்தான் அனுமான்.
அங்கிருந்து இலங்கை மாநகரின் எழிலைப் பார்த்துத் திகைத்தான்.தேவேந்திரப் பட்டணம் போலத் திகழ்ந்தது இலங்கை.மெதுவாக இடது காலை முதலில் எடுத்துவைத்து நகருக்குள் புக எண்ணினான்.
அப்போது திடீரென்று இடி இடிப்பது போல் நகைப்புச் சத்தம் கேட்டது.எக்காளச் சிரிப்புடன் ஒரு பெண் அங்கு நின்றிருந்தாள். அவள் உருவமும் சுரசையின் உருவம்போல மிகப் பயங்கரமாக இருந்தது.சடை பிடித்த தலைமயிரும் கரிய பெரிய நெற்றியும் அதில் தீப்பிழம்பு போன்ற கண்களும் பெரிய பாறைகளை அடுக்கிவைத்ததுபோலப் பற்களும் கழுத்தில் அணிந்திருந்த கபாலமாலைகளும் அவள் ஒரு அரக்கி என்று பறைசாற்றின.
அவளை நேராகப் பார்த்தான் அனுமான்.அவளுக்கோ அதிர்ச்சி. தன்னைப் பார்த்து அஞ்சாமல் வேடிக்கை பார்க்கும் ஒரு வானரனைப் பார்த்து 
"யார் நீ?" என்று இடி போல முழக்கினாள். "நீ யார் என முதலில் கூறு."என பதிலுக்குக் குரல் கொடுத்தான்.அனுமான்.
தன்னை நோக்கி அஞ்சாத அனுமனைக் கண்டு திகைத்த அரக்கி "நான் லங்கிணி. இந்த இலங்காபுரியின் காவல் தேவதை. லங்காபுரிக்குள் அந்நியர் 
யாரையும் அனுமதிக்க முடியாது  இது ராவணனின் கட்டளை.ஓடிப்போ" என்று கர்ஜித்தாள்.
"நான் உள்ளே நுழைந்தே தீருவேன் "என்று கூறி முடிக்குமுன் லங்கிணி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.அடுத்தகணம் அனுமான் உள்ளம் கோபத்தீயால் நிறைந்தது. தன வலிமையைத் தன ஒரு கைக்குள் தேக்கி கையை மடக்கி அவள் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.அவ்வளவுதான். வாயில் ரத்தம் கக்கியபடி லங்கிணி தரையில் சாய்ந்தாள். அவள் வாய் "பிரம்மன் சாபம் பலித்து விட்டது "என்று முணுமுணுத்தது.
அதைக்கேட்ட அனுமான் "லங்கிணி என்ன கூறுகிறாய் நீ?" என்றான் வியப்புடன்.
"நான் பிரம்மனை ஆராதிப்பவள்.  இந்த  இலங்கைக்கு ஒரு வானரன் வருவான் அவன் கையினால் நீ தாக்கப் படுவாய். அப்போது முதல் இந்த இலங்கைக்கு அழிவு காலம் ஆரம்பம்.விரைவிலேயே இந்த மாநகரம் அக்கினிக்கு இரையாகும் என்று கூறினார். அவர் கூறியபடி உன்னால் நான் தாக்கப் பட்டேன் இனி இந்த நகரம் அழிவது உறுதி.உனக்கு இனி வெற்றி கிட்டும். நான் வருகிறேன்" என்றபடி மறைந்தாள்  லங்கிணி.
மகிழ்ச்சியுடன் இடது காலை முன்னே வைத்து இலங்கைக்குள் புகுந்தான் அனுமான்.
இரவு வந்துவிட்டது.அரண்மனை முதல் அனைத்து இல்லங்களிலும் மக்கள் உறங்கும் இடங்கள் முழுவதும் தேடினான்.
  தோளில் அவன் ஆயுதமான "கதை"யைச  சுமந்துகொண்டு நிமிர்ந்த நடையும் எங்கே சீதை என்று தேடிய கண்களுமாக இலங்கை நகரின் வீதிகளில் ராஜநடை நடந்து தேடினான்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அழகிய அரண்மனைக்குள் புகுந்த அனுமான் ராவணன் மனைவி மண்டோதரியைப் பார்த்து சற்றே சந்தேகப் பட்டான்.
பின் மாற்றான் அரண்மனையில் ஜானகி மாதா சயனித்திருக்க மாட்டாள் என்று தெளிந்து தொடர்ந்து தேடினான்.
கும்பகர்ணன் விபீஷணன் போன்றோர் அனைவரின் அரண்மனைகளிலும் தேடிக் களைத்தான். உயரமான உப்பரிகையில் நின்று பார்த்தபொழுது தொலைவில் அடர்ந்த வனம் தெரிவதைக் கண்டான்.அதில்தான் சீதை சிறைப் பட்டிருக்கவேண்டும் என முடிவு செய்து அங்கு மரத்தினூடே ஒளிந்து சென்றான். தான் ஒளிந்திருந்த சிம்சுபா மரத்தை விலக்கிக் கீழே பார்த்தான்.
பகல் நேரத்து நிலவாக ஒளியிழந்து சோகமே உருவாக அமர்ந்திருந்த சீதையைக் கண்டான். 
ராவணனின் ஆசை வார்த்தைகளால் அவமானமும் துயரமுமடைந்த சீதை தன உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தாள். அதைத் தடுக்க ராம நாமத்தை ஜபிக்கத் தொடங்கினான் அனுமான்..அதிகாலை நேரம் ராம நாமத்தை கேட்ட சீதை மனம் மகிழ்ந்து  தன முன் நின்ற அனுமனைக் கனிவுடன் பார்த்தாள்.
சீதையிடம் தான் ராமதூதன் என்பதை நிலைநாட்டி ராமன் கொடுத்த கணையாழியைத் தந்து சீதையிடமிருந்து சூளாமணியைப் பெற்றுக் கொண்டு சீதையிடம் விரைவில் ஸ்ரீராமர் படையுடன் வருவார் எனக் கூறிவிட்டு சீதையிடம்  ஆசி பெற்றுப்  புறப்பட்டான் அனுமான்.
பின் அசோகவனத்தையும் ராவணனின் பல படைவீரர்களையும் அழித்தான். ராவணனை எச்சரித்துவிட்டு அவன் தன வாலில் வைத்த நெருப்பால் இலங்கையை எரியூட்டி ராமன் முன் வந்து நின்றான்  கண்டேன் சீதையை என்று கூறி தெற்கு திசை நோக்கி கற்பின் சிகரமாம் சீதாதேவியை வணங்கி ராமனிடம் சூளாமணியைக் கொடுத்தான் அனுமன்.
சுந்தரனான அனுமனின் பெருமையைக் கூறுவது சுந்தரகாண்டம். அனுமனின் அறிவுத் திறன்,செயல்திறன், சொல்லாற்றல்,பக்தி ஆகியவற்றை விளக்குவது சுந்தரகாண்டம். இதைப் படிப்பவர்களுக்கு அனுமனுக்குள்ள ஆற்றல் அனைத்தும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்தப் புத்தாண்டில் நம் இளைய சமுதாயம் அனுமனைப் போல ஆற்றலும் அறிவும் பெற்றுத் திகழவேண்டும் என்று உங்கள் பாட்டி வாழ்த்துகிறேன்.
ஜனவரி 11-ம் நாள் அனுமத் ஜெயந்தி வருகிறது. அந்தநாளில் கீழ்வரும் பாடலைப் படித்து அனுமனின் அருளைப் பெறக் கேட்டுக் கொள்கிறேன்.
                                                       "அஞ்சிலே ஒன்று பெற்றான் (காற்று)   
                                                         அஞ்சிலே ஒன்றைத் தாவி(கடல்-நீர்) 
                                                         அஞ்சிலே ஒன்று ஆறாக (ஆகாயம்)-ஆரியர்க்காக ஏகி 
                                                         அஞ்சிலே ஒன்று பெற்ற (பூமாதேவி-நிலம்)அணங்கைக் கண்டு  அயலார் ஊரில் 
                                                         அஞ்சிலே ஒன்றை வைத்தான் (நெருப்பு)
                                                         அவன் நம்மை அளித்துக் காப்பான்."
   "அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 21 நவம்பர், 2012

100- உண்மை நண்பன்

அன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் கூறியும் விமரிசித்தும்  வந்த அன்பர்களுக்கு எனது நெஞ்சம் கனிந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தக் கதைகள் மூலம் உங்களின் இல்லத்துச் சிறுவர்களின் மனம் மகிழ்ந்திருக்குமாயின் மனம் பண் பட்டிருக்குமாயின் 
அதுவே உங்கள் பாட்டிக்கு நீங்கள் அளித்த  பரிசு என மகிழ்வேன்.
 தொடர்ந்து படித்து கருத்துகள் கூறவும்.உங்கள் நண்பர்களுக்கும் கூறி அவர்களையும் படிக்குமாறு கூறவும்.
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆதரவை விரும்பும் உங்கள் அன்புப் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.

                    





உண்மை நண்பன்


ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர்.ஒருவன் பாலு. மற்றொருவன் சோமு.இருவரில் சோமு பாலுமீது உண்மையான அன்பு கொண்டிருந்தான்.எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பான்.ஆனால் பாலு தன நட்புதான் உயர்ந்தது.தனக்குதான் நட்பைப் பற்றி அதிகமாகத் தெரியும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பான்.
ஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போகவேண்டி இருந்தது.அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர்.ஊருக்கு  வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது இருவரும் அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.
திடீரென்று ஊஊ என்று சோமு குரல் எழுப்பினான்.
அந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்ட பாலு பட்டென்று சோமுவின் கன்னத்தில் ஒரு அறை  கொடுத்தான்.திடுக்கிட்ட சோமு சற்றும் கோபப்படாமல் "பாலு, என்னை ஏன் அடித்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா?"
"இப்படித் திடீரென்று கத்தினால் நான் பயந்து விட மாட்டேனா?இப்போது சொல் ஏன் அப்படிக் கத்தினாய்?" 

இந்த பகுதியில் விலங்குகள் ஏதேனும் இருந்தால் விலகி ஓடட்டும் என்றுதான் குரல் எழுப்பினேன் என்று சொன்னவுடன் சோமு மெளனமாக நடந்தான்.அப்போது வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதில் இறங்கிய சோமு ஓடும் நீரில்.'தன்னைத் தன நண்பன் அடித்து விட்டான்' என்று எழுதினான்.அதைப் பார்த்த பாலு ஒன்றும் புரியாமல் திகைத்தான்.
அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தொடர்ந்து நடந்தான் சோமு.
நடுக்காட்டில் நடந்து கொண்டிருந்தனர் இருவரும்.வழியில் ஒரு சேறு நிறைந்த குட்டை இருந்தது. அதன் கரை ஓரமாக நடந்து கொண்டிருந்த சோமு கால்வழுக்கிக் குட்டையில் விழுந்தான்.அதைப் பார்த்த பாலு அவனைக் காப்பாற்ற தவித்தான். சோமு கொஞ்சம் கொஞ்சமாக சேற்றுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். வேகமாகத் தன தலையில் கட்டியிருந்த தலைப் பாகையை அவிழ்த்து சோமுவிடம் வீசி அவனைப் பற்றிக் கொள்ளச் சொல்லி சேற்றிலிருந்து மீட்டான். அதற்காக சோமு ஆயிரம் முறை நன்றி சொன்னான்.உடையைச் சுத்தம் செய்துகொண்டு தொடர்ந்து நடந்தனர்.
சற்று த் தொலைவு சென்றவுடன் சோமு  வழியில் தெரிந்த ஒரு பாறையில் சிறு கல்லால் தன நண்பன் காப்பாற்றியதை எழுதினான் புன்னகையுடன் அதைப் பார்த்தான் பாலு..

நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் பேசிச் சிரித்தவாறே காட்டுக்குள் நடந்தனர். பாலு கேட்டான்."சோமு இப்போது பழைய கதையில் வருவது போல் கரடி வந்தால் என்ன செய்வாய்?"
"எனக்குத்தான் மரமேறத் தெரியுமே. மரத்தின்மேல் ஏறித் தப்பிவிடுவேன்."

மரம் ஏறத் தெரியாத பாலு உடனே சிந்தனை வயப்பட்டான்.வாய் பேசாமல்  நடந்தவனுக்கு அச்சம்  ஏற்பட்டது.சோமு சொன்னது போல ஏதேனும் வன விலங்குகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று நடுங்கினான்.
அவன் அஞ்சியது போலவே ஒரு சல சலப்பும் உறுமலும் கேட்டது.
சோமுவும் சட்டென நின்றான்.பாலுவின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.தரதரவென்று அவனை இழுத்துச் சென்று ஒரு பெரிய மரத்தை நோக்கி ஓடினான்.இப்போது ஒலி  எதுவும் கேட்கவில்லை பாலுவுக்குப் பயம் நீங்கியதுபோல் இருக்கவே குரலை எழுப்பி சோமு என்று ஆரம்பித்தான்.சட்டென அவன் வாயைப் பொத்திய சோமு அந்தப் பெரிய மரத்தின் அருகே குனிந்து நின்றான்.மரமேறத் தெரியாத பாலுவைத் தன முதுகின்மேல் ஏறி மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு மரத்தின் உச்சிக்குப் போக உதவினான்.பின் தானும் ஏறி உச்சியில் அமர்ந்து கொண்டான்.காடு முழுவதும் நன்கு  தெரிந்தது.பாலு எவ்வளவு பெரிய காடு என்று ஆச்சரியப்பட்டான்.
சோமு"பாலு, மெதுவாகப் பேசு.அருகே ஏதோ விலங்கு இருக்கு"என்றவுடன் பாலு வாயை இருக்க மூடிக் கொண்டான்.சற்று நேரத்தில் ஒரு புலி இரைக்காக அங்குமிங்கும் அலைந்தபடி செல்வதைக் கண்டனர்.பாலு அச்சத்தில் சோமுவைக் கட்டிக் கொண்டான்.
அந்தப் புலி வெகு தூரம் சென்று விட்டதை மரத்தின் மேல் இருந்து பார்த்தபின் இருவரும் கீழே இறங்கினர்.அச்சத்துடன் இருவரும் மிக வேகமாக ஊரைச் சென்றடைந்தனர்.
"சோமு, நான்  புலிக்கு இரையாகாமல்  என்னைக் காத்தாய்.நீயே உண்மையான நண்பன்."
"நான் சேற்றில் அமிழ்ந்து போகாமல் என்னைக் காத்தாய் நீயே என் உண்மையான நண்பன்."
"அதுசரி. முதல்முறை உன்னை அடித்தேன் அதை நீரில் எழுதினாய். மறுமுறை சேற்றிலிருந்து காப்பாற்றியதைக்  கல்மேல் எழுதினாயே. அதுதான்
ஏனென்று விளங்கவில்லை."
"நண்பன்தவறாகத்  தீங்கு செய்யும் பொழுது அதை நீர்மேல் எழுத்துப் போல மறந்துவிட வேண்டும். ஆனால் அவன் செய்யும் நன்மையைக்  கல்மேல் எழுத்துப் போல ஒருகாலும் மறக்காமல் இருக்கவேண்டும்.அதற்காகத் தான் நீர்மேலும் கல்மேலும் அந்த செய்கைகளை எழுதினேன். ஒரு உண்மையான நண்பனை பொறுத்துப் போவதுதான் உண்மையான நட்பு.ஒருவர் பொறை  இருவர் நட்பு என்பதுதான் நட்பின் இலக்கணம்.அத்துடன் அவன் செய்த நன்மைகளை எப்போதும் மறவாமல் நன்றியறிதலோடு நடந்து கொள்ள வேண்டும்."என்று சோமு சொன்னவுடன் பாலு வேகமாக ஓடினான்.அவன் பின்னாலேயே குரல் கொடுத்தவாறு ஓடினான் சோமு.
சற்றுத் தொலைவில் இருந்த ஒரு பாறைமீது மற்றொரு கல்கொண்டு சோமு தன்னை புலியிடமிருந்து காப்பாற்றியதை எழுதத் தொடங்கினான் பாலு.அதைப் பார்த்த சோமு பாலுவை அன்புடன் கட்டிக் கொண்டான். இரண்டு நண்பர்களும் உண்மை அன்போடு சிரித்து மகிழ்ந்தனர்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி வாழ்த்துகள்.


சுட்டிக்கதையைப் படிக்கும்  அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறையட்டும் என்று வாழ்த்தும் உங்கள் அன்புப் பாட்டி.
ருக்மணி சேஷசாயி.
 





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 4 நவம்பர், 2012

99- சான்றாண்மைஎன்பது

 ஒரு கிராமத்தில் அப்பாசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.மூத்தவன் பெயர் கணேசன்.இளையவன் பெயர் 
வேலு. இருவரும் அந்த ஊரிலுள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். கணேசன் எட்டாவதும் வேலு ஆறாவதும் படித்து வந்தனர்.கணேசனுக்குத் தன 
தம்பி வேலுவின் மேல் மிகவும் பிரியம். அதனால் அவன் செய்யும் சிறு தவறுகளை எப்போதும் சமாளித்து விடுவான்.மற்றவர் தன தம்பியை ஏதும் குறை கூறிவிடக் கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பான்.ஆனால் இதை சற்றும் உணராத வேலு எப்போதும் தன்னையே கவனிக்கும் தன அண்ணன்மேல் கோபப் படுவான்.
ஆனாலும் தன பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை கணேசன். தம்பி யாருடன் பேசுகிறான், எங்கே வெளியே போகிறான் அவன் நண்பர்கள் யார் யார் என கவனித்துக் கொண்டிருப்பான். ஒருமுறை வேலுவின்மீது பொறாமை கொண்ட துஷ்டப் பையன் கோபி  வேறு ஒரு பையனின் புத்தகத்தைத் திருடி வேலுவின் பைக்குள் வைத்துவிட்டான்.வீட்டுக்கு வந்த வேலுவின் பையிலிருந்த அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்த கணேசன் உடனே சைக்கிளில் போய்  அந்தப் புத்தகம் யாருடையதோ அந்தப்  பையனிடமே கொடுத்துவிட்டு வந்தான்.மறுநாள் கோபி  தன எதிரி  வேலுவுக்குத் திருட்டுப் பட்டம் கட்ட முடிய வில்லையே என வருந்தினான். இந்தச் செய்தியை வேலுவின் நண்பன் சொன்னபோது வேலு திகைத்தான். அந்தப் புத்தகம் என்னிடம் இருப்பதை ஆசிரியர் பார்த்திருந்தால் நான்தான் திருடன் என நினைத்திருப்பாரே.நல்லவேளை புத்தகம் என்னிடம் இல்லாதது நல்லதாய்ப் போயிற்று என எண்ணியவன் இது எப்படி நடந்திருக்கும்? என சிந்தித்தான்.ஆனாலும்  திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல் அந்த கோபி   தவித்ததைப் பார்த்துச் சிரித்தான் வேலு.
இது எப்படி நடந்தது.  வீட்டுக்கு வந்தவனிடம் வகுப்பில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி கணேசன் கேட்கவே வேலு அவன்தான் புத்தகத்தை எடுத்து நண்பனின் வீட்டில் கொடுத்திருக்கிறான் எனப் புரிந்து கொண்டான்.ஆனாலும் வழக்கம் போல என் பையை நீ ஏன்  எடுத்தாய்? என்று சண்டைக்கு வந்தான். ஆனால் கணேசன் சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான்.
வேலு அப்பாவிடம் வந்து படிக்க உட்கார்ந்தான்.நடந்த செய்தியை ஏற்கெனவே கணேசு அப்பாவிடம் சொல்லிவிட்டான்.ஆனால் வேலு எதுவுமே நடவாதது போல் திருக்குறளைப் பற்றி அப்பாவிடம் கேள்வி கேட்டான்."
"அப்பா, சான்றாண்மைன்னா என்ன பொருள் அப்பா " என்றான். அவனைக் கூர்ந்து பார்த்த அப்பா "நாளைக்குச் சொல்கிறேன்."என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
மறுநாள் அன்று விடுமுறை தினம். மாலையில் வேலுவையும் கணேசனையும் கடற்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று அழைத்தார்.ஆனால் கணேசன் எனக்குப் பரீட்சை வருகிறது. நான் படிக்கணும் நான் வரவில்லை என்று சொல்லவே வேலுவை மட்டும் அழைத்துக் கொண்டு கடற்கரை சென்று மணலில் அமர்ந்தார் அப்பாசாமி.
தண்ணீரில் விளையாடிக் களைத்தபின் அப்பாவின் அருகில் வந்து அமர்ந்தான் வேலு. அப்போது நாலைந்து மீனவப் பையன்கள் கரையோரமாக ஒலியெழுப்பிய வண்ணம் எதையோ தேடினர். அப்போது வேலுவின் அருகே ஒரு நண்டு பரபரவென்று நடந்து சென்றது.அதன் கால்கள் பதிந்த இடத்தில் ஈரமண்ணில் விதம் விதமான கோடுகள் பதிந்தன.அதைப் பார்த்துக் குஷியில் குதித்தான்வேலு.அடுத்த நொடியில் ஒரு அலை வந்து அந்தக் கால்தடத்தை அழித்துச் சென்றது.இப்படி நண்டு கோலம் போடுவதும் அலைகள் அழிப்பதுமாக இந்த விளையாட்டை ரசித்துப் பார்த்தான் வேலு.
திடீரென்று அந்த மீனவச் சிறுவர்கள் அங்கு வந்து நண்டைப பிடிக்க அதன் வளையைத்  தேடினார்கள்.அது சென்ற வழியான கால்தடத்தைத் தேடிப்  பார்த்தனர்.எங்கும் தடம்  இல்லாதபடி அலைதான் அழித்து விட்டதே.நண்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
இந்தக் காட்சியை வேலுவுக்குக் காட்டினார் அப்பா.
"அவர்கள் எதற்காக வந்தனர் தெரியுமா?"
"நண்டு பிடிக்க வந்தனர்.இல்லையாப்பா?"
"நண்டைப் பிடிக்க முடிஞ்சுதா?"
"அதுதான் வளைக்குள்ளே ஓடி ஒளிஞ்சுடிச்சே"
"அப்படி ஓடி ஒளிய  யார் காரணம்?"
"அலை வந்து அதனுடைய கால்தடத்தை அழிச்சுட்டதாலே நண்டு வளையைக் கண்டு பிடிக்க முடியாமே போய்ட்டாங்கப்பா."
"ரொம்ப சரி.அந்த நண்டு நான் போட்ட அழகான கோலத்தை அழிக்கறியே அப்படீன்னு கோபப் பட்டு அலையைத்  திட்டியிருக்கும் இல்லையா?"
"ஆமாம்ப்பா"
"அந்த அலையும் ரோஷப் பட்டு நண்டின் கால்தடத்தை அழிக்காமே விட்டிருந்தா என்ன நடந்திருக்கும்?"
"ஐயோ,அந்தப் பையன்கள் வளையைக் கண்டு பிடிச்சு  நண்டைப் பிடிச்சிருப்பாங்களே "
"இப்போ அந்த நண்டு என்ன நினைக்குது தெரியுமா? தன உயிரைக் காப்பாத்தின அலைகிட்டப் போயி என்ன சொல்லும்?"
"அந்த அலைகிட்டே மன்னிப்புக் கேட்குமா அப்பா?"
"இன்னும் அது மன்னிப்புக் கேட்கலையே."
"அது எப்படி உங்களுக்குத் தெரியும்?"
"நீதான் அந்த நண்டு.உன் அண்ணன்தான் அந்த அலை.அவன் செய்யும் ஒவ்வொரு உதவியையும் அந்த நண்டைப் போல நீ தப்பாக நினைத்து கோபப் படுகிறாய் இல்லையா?"
வேலு தன தவறை இப்போது உணரலானான்.அண்ணன் செய்யும் ஒவ்வொரு செயலும் தன்னைப் பாதுகாக்கவே என்பதை அவன் புரிந்து கொண்டான்.
"நீ உன் அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டால்தான் அந்த நண்டும் மன்னிப்புக் கேட்கும்.அந்த அலையும் மகிழ்ச்சியடையும்."
"இனிமே நான் அண்ணன் கூட சண்டை போடா மாட்டேம்பா .அண்ணன் ரொம்ப நல்லவம்ப்பா "
"நீ கேட்டியே சான்றாண்மைன்னா என்னப்பான்னு? அதுக்குப் பொருளே உங்கண்ணன் தான் வேலு."
"எனக்குப் புரியலப்பா."
"சொல்றேன்.
"நம்ம திருவள்ளுவர் ஒரு குரள்  சொல்லியிருக்கிறார்."
                       "கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து 
                        சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு."
"அப்படின்னா என்னப்பா?"
"சொல்றேன். நம்ம கடமை இதுன்னு தெரிஞ்சு அதை நல்ல முறையிலே செய்து முடிக்கிறதுதான் நம்ம கடமைன்னு இருக்கிறவங்களை சான்றோர்னு சொல்வாங்க.உங்கண்ணன் உனக்கு எப்பவும் நல்லதே செய்யறானே அவன் சான்றோன் தானே?"
"ஆமாம்ப்பா. சான்றாண்மைன்னா நல்ல குணங்கள் இருக்கிறவங்கன்னு சொல்லலாம் இல்லையா?"
"சரியாப் புரிஞ்சிகிட்டே வேலு.நாம கடற்கரைக்கு வந்தவேலை  முடிஞ்சுடுச்சு. வா போகலாம்."என்று எழுந்தார் அப்பாசாமி.
அவருடைய கையைப் பற்றிக் கொண்டு மனம் நிறைய அண்ணனின் அன்பைப் பற்றி எண்ணிக் கொண்டு வாயில் கணேசண்ணே , கணேசண்ணே என்றபடியே  அவருடன் நடந்தான் வேலு.

"ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 17 அக்டோபர், 2012

98-.திருக்குறள் கதைகள்.- விதியையும் வெல்லலாம்


பாட்டி சொல்லும் கதைகளைப் படிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை.குழந்தைகளுக்காக தமிழ்ப் பாடல்களும்,கதைகளும், தமிழ் பயில 

i pod, iphone,  applications    இருக்கிறது.www.haviga.com     <http.www.haviga.com> என்ற தளத்தில் பாட்டி சொன்ன கதைகளில் பாட்டியே கதை சொல்வதைக் 

கேட்கலாம். இந்த தளத்திற்கு விஜயம் செய்யவும்.

உங்கள் அன்புப் பாட்டி,

ருக்மணி சேஷசாயி.
                                         விதியையும் வெல்லலாம்.

     வீரப்பன் என்பவர் ஒரு தொழிலாளி. அவருக்கு இரண்டு மகன்கள்  இருந்தனர்.பெரியவன் சிவா. இளையவன் சங்கரன்.சிவா நல்ல ஆரோக்யமான உடலுடன் அழகாக இருந்தான். ஆனால் சிறியவன் சங்கரன்  இரண்டு கால்களும்  செயலிழந்து  நடக்க இயலாதவனாக இருந்தான்.எப்போதும் தனியாக அமர்ந்து ஆகாயம் மரங்கள் பறவைகள் என வேடிக்கை பார்த்துக் கொண்டு  இருப்பான்.அதிகமாகப் பேசமாட்டான்.
      எப்போதும் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி இருப்பான்.எப்போதாவது அவனைப் பார்க்க நேர்ந்தால் வீரப்பன் கடுகடுவென முகத்தை வைத்துக் கொள்வார். ஏதேனும் பேச நினைத்தால் கூட சங்கரன் அவர் முகத்தைப் பார்த்து பயந்து பேசாமல் வெளியே பார்த்துக் கொண்டு  அமர்ந்து விடுவான்.
       ஒருமுறை சங்கரனுக்குப் பிறந்த நாள் வந்தது.அன்று அப்பா கோபமாக,எ' இவன் பிறக்கவில்லையென்று யார் அழுதாங்க?ஒன்றுக்கும் உபயோகமில்லை. தன்னையே பார்த்துக் கொள்ள துப்பில்லை" என்று திட்டிவிட்டுப் போய்விட்டார்.ஆனால் அம்மாதான் மனம் கேட்காமல் சங்கரனுக்குப் புதுச் சட்டை வாங்கிவந்து போட்டு தலைவாரிவிட்டு அவனுக்கு இனிப்பும் ஊட்டிவிட்டார்கள்.அப்போது சங்கரனின் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
        அந்தப் பிறந்த நாள் சங்கரனின் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.அவன் மாமா அவனுக்கு ஒரு வண்ணம் தீட்டும் பெட்டியைக் கொண்டுவந்து பரிசாகக் கொடுத்தார்.  அதிலிருக்கும் வண்ணங்களைக் கண்டு சங்கரன் மிகவும் மகிழ்ந்தான்.கைக்குக் கிடைத்த தாள்களில் எல்லாம் அவனுக்குத் தோன்றிய படங்களை வரைந்து தள்ளி மகிழ்ந்தான். பொழுது போகாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது நேரம் போதாமல் வரையும் வேலையில் ஆழ்ந்து போனான்.                         
            அவன் இருந்த அறை  முழுவதும் தாள்கள் சிலசமயங்களில் அவன் அப்பா வீரப்பன் இதென்னடா குப்பை என்று திட்டிவிட்டுச் செல்வார்.ஆனாலும் ஏதோ பொழுதைக் கழிக்கட்டும் என்று பேசாமல் இருந்து விடுவார்.அவனுடைய வரையும் ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்தவன் அவன் அண்ணன் சிவாதான்.தினமும்  பள்ளியில் இருந்து வந்தவுடன் தன தம்பியுடன் சேர்ந்துதான் டீ அருந்துவான். சங்கரும் தன அண்ணனுக்காகக் காத்திருப்பான்.  இருவரும் ஒருவர்மேல் ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தனர்.
           அன்றும் பள்ளி விட்டு ஓடிவந்த சிவா தன தம்பி வரைந்த ஓவியங்களை எடுத்துக் கொண்டு அதே தெருவில் வசித்த ராதா டீச்சர் வீட்டுக்குப் போனான். அவர்களிடம் அத்தனை ஓவியங்களையும் கொடுத்தான்.அதைப் பார்த்த டீச்சர் மிகவும் மகிழ்ந்தார்.ஒருவாரம் கழிந்ததும்தான் அவர்கள் ஏன்  அந்த ஓவியங்களைக் கேட்டார்கள்  என்று புரிந்தது.சிவா படித்த பள்ளியில் கலைப் பொருள் கண்காட்சி ஒன்று நடத்துவதாக ஏற்பாடாகியிருந்தது.அந்த சமயம் ஒரு அறை  முழுவதும் சங்கரனின் ஓவியங்களுக்கு    அழகாக தலைப்புகளைக் கொடுத்து வரிசைப் படுத்தி காட்சிக்கு வைத்திருந்தனர்.அதைப் பார்த்த அனைவரும் அந்த ஓவியங்களைப் பாராட்டினர்.
                பள்ளிவிழாவுக்கு வந்திருந்த பிரமுகர்    அந்த ஓவியங்களைப் பாராட்டியதோடு சிறுவர்களுக்கான கலைப் போட்டி டில்லியில் நடக்கிறது அதற்கு இந்த ஓவியங்களில் சிறந்ததை அனுப்புமாறு ஆலோசனை கூறினார். ராதா டீச்சர் மிகுந்த மகிழ்ச்சியோடு அப்படியே செல்வதாக வாக்களித்ததோடு அடுத்த நாளே ஐந்து சிறந்த ஓவியங்களை அனுப்பிவைத்தார். அத்துடன் பள்ளியில் அந்த ஓவியங்களைப் பார்ப்பவர்கள் தங்களால் இயன்ற காசுகளைத் தருமாறு ஒரு உண்டியலும் வைத்திருந்தார்.பதினைந்து நாட்களில் அந்த உண்டியலில் கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய்கள் சேர்ந்திருந்தன. 
அன்று மாலையே ராதா டீச்சர்  அந்தத் தொகையை எடுத்துக் கொண்டு சிவாவுடன் அவர்களின் இல்லம் நோக்கிச் சென்றார்.  ஏதோ படத்தை வரைந்து கொண்டிருந்த சங்கரன் அண்ணனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைக் காட்டினான்.அவனுடன் வந்திருக்கும் டீச்சரைப் பார்த்து வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டான்.                  
ராதா டீச்சர் வீரப்பனையும் அவர் மனைவி தேவானையையும் அழைத்து அவர்களிடம் பேசினார்.
"ஐயா, உங்கள் மகன் மிகுந்த திறமைசாலி. அவனுடைய படங்கள் டில்லிக்குப் போயிருக்கின்றன. கட்டாயம் அவன் திறமைக்குப் பரிசு கிடைக்கும்.அவனை இன்னும் நீங்கள் ஊக்கப்படுத்தினால் சிறந்த ஓவியனாக வளருவான். இதோ அவனுடைய படங்களுக்கான வெகுமதி இந்தப் பணம். இதைவைத்து அவனுக்கு மரக்கால்களைப் பொருத்துங்கள்.நானும் உதவி செய்கிறேன்.அவனை உலகின் சிறந்த மனிதனாகத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யலாம். அதோடு அவனைப் பெற்ற நீங்களும் பெருமைப் படலாம்." 
 .துயரமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் தேவானை பேசினார்." அம்மா, இத்தனை நாள் நாங்கள் செய்த பாவம். அவன் விதி இதுன்னு இருந்தோம். ஆனா நீங்க சொன்ன பிறகுதான் அவனும் நல்லா வருவான்னு எங்களுக்குத் தெரியுதும்மா.உங்களுக்குத்தான் நாங்க நன்றி சொல்லணும்." என்று டீச்சரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒத்திக் கொண்டாள்  தேவானை.
வீரப்பன் ஏதும் பேசத் தோன்றாமல் கண்களில் நன்றியும் மகிழ்ச்சியும் கலந்த நீர் நிறைய சங்கரனை அணைத்துக் கொண்டார்.

            அடுத்தமாதமே  அந்த ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி பரிசுப் பொருள்களுடன் சங்கரனைத் தேடிவந்ததும் அவனுக்கு டில்லிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்திருப்பதும் விழாவில் குடியரசுத் தலைவரின் கையால் அவன் பரிசு பெறப் போவதையும் அறிந்த போது வீரப்பனால் நம்பவே முடியவில்லை. சாதாரணத் தொழிலாளியான தனக்கு இத்தனை மதிப்பா என மகிழ்ந்து போனார். 
இப்போது சங்கரன் செயற்கைக் கால்களுடன் தனக்கென ஒதுக்கப்பட்ட தனியறையில் நின்று கொண்டு தூரிகை பிடித்து வரைந்து கொண்டு இருக்கிறான்
அவனைத் தேடி பத்திரிகைக்காரர்களும் சினிமாப் படம் எடுப்பவர்களும் பணத்தைக் கொட்டிப் படம் வேண்டுமென்று கேட்டுத் தவம் கிடக்கின்றனர்.
விதியையும் வெல்லலாம் எனத் தனக்குள் சொல்லிக் கொண்ட வீரப்பன் பெருமையுடன் தன மகனைப் பார்த்தார்.                                   
           அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
            பெருமை முயற்சி தரும் 
உண்மைதானே.வள்ளுவர் கூறும் பொன்மொழி நம் வாழ்க்கைக்கு எத்தனை சிறந்த வழிகாட்டி!  தன்னால் ஏதும் இயலாதென்று தயங்கி தளர்ந்து இராமல் முயற்சி செய்தால் வாழ்வில் பெருமை பெறலாம் என்ற உயந்த அறிவுரைநாம் அனைவரும் முக்கியமாக வளரும் இளைய சமுதாயம் உணரவேண்டும்.












ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

97-அரணாகும் அறிவு.


முன்னொரு காலத்தில் பல சிற்றரசர்கள் தனித் தனி நாடுகளை ஆண்டு வந்தனர். .அப்படிப்பட்ட  ஒரு சிற்றரசுதான் இங்கு குறிப்பிடப்படும் ஒரு நாடு. சண்பக புரி என்று அந்த நாட்டுக்குப் பெயர்.அந்த நாட்டுப் பிரபுக்களுக்குச் சில அதிகாரங்கள் இருந்தன. பிரபுக்கள் அந்த நாட்டுக்கு மன்னனைத் தேர்ந்தெடுப்பர். ஓராண்டானதும் அவன் பதவியிறக்கம் செய்யப்பட்டு தொலைவில் உள்ள மனிதரற்ற கடல் நடுவில் இருக்கும் தீவுக்கு அனுப்பப் படுவான். கானகம் நிறைந்த அந்தத் தீவில் பல விலங்கினங்கள் வாழ்ந்து வந்தன.அங்கு செல்பவர் இறப்பது உறுதி.இப்படி ஓராண்டுக்கு ஒரு மன்னர் என்ற விசித்திர பழக்கத்தைக் கொண்டிருந்தனர் செண்பக புரி மக்கள்.அதனால் மன்னர் சிம்மாசனம் என்றால் மக்கள் ஓடி ஒளிந்து கொள்வர்.
அந்த ஆண்டும் மன்னரைத் தேர்ந்தெடுக்கும்  நாள் வந்தது. நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள மக்கள் அரசு அதிகாரிகள் கண்ணில் படாமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தனர். 
அந்த ஊரில் வைசாலி என்று ஒரு பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு  ஒரே மகன் விசாகன். தந்தையற்ற விசாகனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தாள் வைசாலி. வைசாலி கல்வி கற்காவிடினும்  கேள்வி ஞானம் நிறைந்தவள். அறிவும் ஆற்றலும் மிகுந்தவள். தன் மகனையும் அவள் அறிவு புகட்டி நிறைந்த அறிவுள்ளவனாகவே வளர்த்திருந்தாள்.
அன்று தாயும் மகனுமாகத் தங்கள் நிலத்தைக் கவனிக்க வயலுக்குச் சென்றிருந்தனர்.மாலையில் வீடு திரும்பும்பொழுது ஊர்மக்கள் யாரையும் காணோம்.இருவரும் காரணம் தெரியாமல் திகைத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் எதிரே காவலர் நால்வர் வந்து நின்று அவர்களை பிரபுக்களின் முன்னே கொண்டு போய் நிறுத்தினர். இப்போது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. 
விசாகன் "ஐயா, நான் விவசாயி. கல்விஎன்பதே அறியாதவன் என்னை மன்னனாக்கினால் நாட்டின் நிலை என்னாகும்?நன்கு படித்த பிரபுக்களின் வம்சத்தில் மன்னனைத் தேர்ந்தெடுங்கள்."என்று கேட்டுக் கொண்டான்.
ஆனால் இருள் வருமுன் மன்னனுக்கு முடிசூட்ட வேண்டிய கட்டாயத்தினால் பிரபுக்கள் விசாகனுக்கு முடிசூட்டினர். இப்போது விசாகன் அந்த நாட்டு மன்னன். மக்கள் அவனை மகிழ்ச்சியோடு பார்த்ததைவிட பரிதாபமாகப் பார்த்தனர்.இன்னும் ஓராண்டுதானே இவன் ஆயுள். பிறகு இவன் விலங்குகளுக்கு இரையாகப் போகிறானே என்பதை எண்ணி அவனுக்காக அனுதாபப் பட்டனர்.வைசாலி கலங்கவில்லை.வருவது வரட்டும்.என்று துணிவுடன் இருக்க தன் மகனுக்கு அறிவுரை கூறினாள்.
நாட்கள் சென்றன. விசாகன் மன்னனாகி இரண்டு மாதங்கள் கழிந்தன. அந்த நாட்டிலிருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் சிலர் காணாமல் போகத் தொடங்கினர்.பிரபுக்களுக்கு இதென்ன புது விபரீதம் என்று அச்சம் ஏற்பட்டது.இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படத் தொடங்கியது.தெய்வக் குற்றமா அல்லது கடல்கொள்ளையர் வேலையா என ஆலோசனை செய்யத் தொடங்கினர்.  
இப்படியே மாதங்கள் ஓடின.இப்போது இன்னும் ஒரு மாதம்தான் விசாகன் மன்னனாக இருப்பான்.அதன்பின் நடுக்கடலிலுள்ள தீவுக்கானகத்திற்கு அனுப்பப் படுவான்.அதன்பின் அவன் மீண்டு வரமாட்டான். பாவம் இளம் வயது. அவன் தாய்க்கு மனம் எவ்வளவு வேதனைப் படும்?என்று மக்கள் பலவாறு பேசிக் கொண்டனர்.
திடீரென்று ஒரு நாள் அரண்மனையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ராஜமாதாவான வைசாலியைக் காணோம். ஊரெங்கும் ஒரே பரபரப்பு. பிரபுக்களின் அச்சம் உச்சத்திற்கே போய்விட்டது. சபையைக் கூட்டி ஆலோசனை செய்தனர். ஊரெங்கும் ராஜமாதாவைத் தேட ஆணை பிறப்பித்தான் விசாகன்.ஆனால் வைசாலியோ அவளுக்கு முன்னர் காணாமல் போன மக்களோ யாரும் கிடைக்கவே இல்லை.
இதற்கிடையே விசாகனின் மன்னர் பதவி முடிவுக்கு வந்தது. அன்றுடன் அவன் அரசபதவி முடிந்தது.
மறுநாள் அதிகாலையிலேயே அரண்மனையில் பிரபுக்கள் கூடினர்.சகல மரியாதையுடன் விசாகனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்.இளம் வயது மன்னனை கடைசியாகப் பார்க்க மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.
ஒரு சிறிய கப்பலில் விசாகன் ஏற்றப் பட்டான்.அதில் ஒரு மாலுமியும் அவனுக்கு உதவியாளனும் மட்டும் இருந்தனர்.பிரபுக்கள் சைகை செய்து கப்பலை செலுத்தச் சொன்னார்கள். 
கப்பல் புறப்பட்டது.கண்ணீருடன் சிலர் கப்பல் மறையும் வரை பார்த்து நின்றனர்.
சில நாட்கள் கழித்து அந்தக் கப்பல் மீண்டும் வந்தது. மாலுமி பிரபுக்களிடம் வழக்கம்போல் விசாகனையும் குறித்த இடத்தில் கடலில் தள்ளிவிட்டதாகத் தெரிவித்தான்.பிரபுக்களும் அடுத்த மன்னனைத் தேர்ந்தெடுத்து பட்டாபிஷேகம் செய்து முடித்தனர்.
இப்போதும் சண்பகபுரி மக்கள் காணாமல் போவது நிற்கவில்லை.
பிரபுக்களின் கவலை அதிகமாயிற்று. அவர்களின் அதிகாரத்திற்கு இடையூறு வந்ததேயென்று அச்சமும் கோபமும் கொண்டனர்.ஓராண்டு முடியும் தறுவாயில் அந்த சண்பகபுரி  மீது படைஎடுத்தான் ஒரு மன்னன். பிரபுக்களுக்கு அச்சத்தை விட ஆச்சரியமே மேலோங்கியது.ஒற்றர்களை ஏவி யாரது என விவரம் கேட்டனர்.
வீரபுரிஎன ஒற்றர் தெரிவிக்க மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளாகினர்.அப்படி ஒரு நாடு இருப்பதாகவே தெரியாதே எனத் திகைத்து முடிக்கும் முன்பாகவே வீரபுரி மன்னன் அரண்மனைக்குள் நுழைந்து மன்னராக ஆட்சி புரிந்து வந்த பிரபுக்களைஎல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தான்.சண்பகபுரியின் ஆட்சியைக் கைப்பற்றினான்.
பட்டாபிஷேகம் செய்து கொண்ட அந்தக் காட்சியைக் கண்டு தலை குனிந்து நின்றிருந்த பிரபுக்களின் முன் வந்து நின்றான் அந்த வீரபுரி மன்னன்.
"என்னைப் பார்த்த நினைவில்லையா உங்களுக்கு?ஓராண்டுக்குள்ளாகவே என்னை மறந்து விட்டீர்களா?"
இந்தக் குரலும் முகமும் பழக்கமானதாக இருக்கிறதே எனத் திகைத்தார்கள் பிரபுக்கள்.அப்போது அவர்கள் முன் வந்து நின்றாள் வைசாலி.
"திகைக்காதீர்கள்.கடந்த ஆண்டு உங்களுக்கு மன்னனாக இருந்த விசாகன்தான்.என் மகன்தான்.உங்களுக்கு அடிமையாக ஒரு ஆண்டு உங்கள் கைப் பாவையாக பொம்மை அரசனாக இருந்தவன்தான்."
'இன்னும் சாகாமல் இருப்பது எப்படி? காட்டில் வனவிலங்குகள் இவனைக் கொல்லவில்லையா? எப்படி ஒரு நாட்டின் மன்னனான்?'அவர்களுக்கு எழுந்த சந்தேகத்தைப போக்கி வைத்தாள் வைசாலி.
"நீங்கள் என்மகனை மன்னனாக்கியதும் அவனிடம் சில வேட்டைக்காரர்களை அனுப்பி அந்தக் காட்டிலுள்ள வனவிலங்குகளை வேட்டையாடச் சொன்னேன். மீண்டும் விவசாயிகள் கட்டடக் கலைஞர்களை அனுப்பி காட்டை நாடாக்கினேன்.அதையெல்லாம் சீர்செய்ய நானே அங்கு சென்று என்மகன் வரும்வரை நாட்டைப பாதுகாத்து படைகளைச் சேர்த்து வந்தேன்.இந்த ஓராண்டுக்குள் எங்கள் வீரபுரி உங்கள் சண்பகபுரியை  விட வலுப்பெற்று நிற்கிறது. என்மகன் விசாகன் இப்போது அறிவினாலும் வீரத்தினாலும் உங்கள் முன் வெற்றிவீரனாக நிற்கிறான்."
விசாகன்,"பிரபுக்களே உங்களின் பேராசையால் அப்பாவி இளைஞர்களை நீங்கள் பலிகொடுப்பதை நிறுத்த என் தாயின் ஆலோசனையின்படி நடந்து நானும் உயிரபெற்று பிற இளைஞர்களையும் காப்பாற்றிவிட்டேன்.எங்கள் உயிருக்கு அரணாக இருந்தது என் தாயின் அறிவு சார்ந்த ஆலோசனைகளே.இனி இந்த சண்பக புரி   வீரபுரியின் ஆட்சிக்குட்பட்டது."என்று சொன்னதைக் கேட்டு மக்கள் மகிழ்ந்தனர்.விசாக மாமன்னர் ! வாழ்க, வாழ்க! என்ற கோஷம் வானைப் பிளந்தது.
 
             "அறிவற்றங்  காக்கும்  கருவி  செறுவார்க்கும் 
                உள்ளழிக்க  லாகா அரண்."
அறிவு அழிவு வராமல் பாதுகாக்கும் ஆயுதம்.பகைவராலும் அழிக்கமுடியாத பாதுகாப்பு அறிவு.
என்று வள்ளுவர் வாக்கு உண்மையல்லவா ?இதுவரை ஏமாற்றி வாழ்ந்தோம். இப்போது அறிவு நம்மை வீழ்த்தி விட்டது" என்று மனம் திருந்தி வைசாலிஇடம்  மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர் பிரபுக்கள்.
உண்மைதானே.அறிவிருந்தால் எங்கும் வெற்றி பெற்று வாழலாம்.எனவே அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.ஆனந்தமாய் வாழ்வோம்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 17 செப்டம்பர், 2012

சுட்டி விகடனுக்கு நன்றி

இந்த இதழில் 'பாட்டி சொல்லும் கதைகள்' பற்றிய சிறப்பான அறிமுகம் செய்துள்ளமைக்கு 'சுட்டி விகடனுக்கு' எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
நன்றியுடன்,
ருக்மணி சேஷசாயி.
--








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

96 - தந்தையின் பெருமை.


      அரசூர் என்று ஒரு கிராமம்.அந்த கிராமத்தில் நாகப்பன் என்பவர் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வ்ந்தார். நாகப்பன்  நல்ல உழைப்பாளி.தன்னிடம் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் பாடுபட்டு உழைத்து தன் குடும்பத்தைக் காத்து வ்ந்தார். மிகவும் பரோபகாரமும் ஏழைகளுக்கு இரங்கும் பண்பும் கொண்டவராக விளங்கினார். தன் வருமானத்தில் சேமித்து வைக்காமல் இல்லையென்று வருபவர்களுக்கு இல்லையென்னாமல் கொடுத்துவந்தார்.இவரது நல்ல உள்ளத்தை தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் பெற்றுப் போனவர்களும் உண்டு.
இத்தகைய உயர்ந்த மனிதரின் மனைவி கமலம். கணவருக்கேற்றகுணவதியாஇருந்தாள்.இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
அவன் பெயர் மாணிக்கம்.அடக்கமும் அன்பும் உருவானவனாக இருந்தான்.பள்ளிப் படிப்பிலும் சிறந்தவனாக விளங்கினான்.இவர்களின் குடும்பம் அமைதியும் அன்பும் மகிழ்ச்சியும் கொண்டு திகழ்ந்தது.
காலம்  ஓடியது. ஒருஆண்டு வெள்ளத்தாலும் மறுஆண்டு வறட்சியாலும் அரசூர் பஞ்சத்துக்கு ஆளானது.அந்த நிலையிலும் தன்னிடம் வருபவர்களுக்கு வீடு நிலம் இவற்றை விற்றும் அடகு வைத்தும் உதவி வ்ந்தார் நாகப்பன். இப்போது உட்கார வீடில்லை.உழுது பயிரிட நிலமில்லை. நோய்க்கு மருந்து வாங்க இயலவில்லை. பசிக்குச் சோறில்லை. 
இவரது நிலைமையைத் தெரிந்து கொண்டவர்கள் இவரிடம் உதவி பெற்றுப் போனவர்கள் யாரும் இவரிடம் வருவதை நிறுத்திவிட்டனர்.
"தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும் .இது தெரியாமல் என்னமோ கர்ணப் பிரபு போல அள்ளிக் கொடுத்துகிட்டிருந்தா இப்படித்தான் தெருவில் நிக்கணும்"என்று கூசாமல் பேசி இவர் தங்களிடம்  நெருங்காமல் விலக்கி வைத்தனர். நாகப்பனும் தான் செய்த உதவியை நினைத்துப் பார்த்தவரில்லை.தன்னிடம் உதவி பெற்றுப் போனவர்கள் வளமுடன் வாழ்வதை  அறிந்து தனக்குள் மகிழ்ந்தார்.
ஊரின் எல்லையில் ஒரு குடிசை அமைத்துத் தங்கியிருக்கலானார்.உடல் நலிவடைந்து விட்டதால் படுத்தபடியே இறைவனை எண்ணி வாழ்ந்து வ்ந்தார்.ஒருநாள் இவரைத் தேடி அவ்வூரின் பெருந்தனவந்தர் ஒருவர் வ்ந்தார்.அவரை வரவேற்று அமரச் சொன்னார் நாகப்பன்.
ஆனால் அவர் அமராமல் நாகப்பனிடம் கடுமையாகப் பேசினார்."உன் ஊதாரித்தனத்தினால் இப்போது இந்த நிலையை அடைந்திருக்கிறாய். வாரிக் கொடுத்ததினால் நீ வள்ளலாகிவிட்டாயா? கடன்காரனாகத்தானே இருக்கிறாய்?"
நாகப்பன்  திடுக்கிட்டார்."ஐயா. நான் யாருக்கும் கடன்பட வில்லையே.எல்லோருக்கும் பணம் கொடுத்து விட்டேனே"
"ஆனால் என்னை மறந்துவிட்டாய்.என்னிடம் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாயா?அது போகட்டும் இந்த ஊரில் பள்ளி கட்ட என்று உன்னிடம் கேட்டபோது ஐந்தாயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னாயே.அதைக் கொடுக்க முடிந்ததா உன்னால்?"
நாகப்பன் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார்.அவர் கண்களில் நீர் கோர்த்ததைக் கண்டார்  தனவந்தர்.
"சரி நாகப்பா. இனியும் இதுபோல் தானம் தருமம் என்று சொல்லிவிட்டு கஷ்டப் படாதே.எனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டாம் அந்த பள்ளிக்கூடத்துக்கான பணமும் நீ தரவேண்டாம் வீட்டை நன்கு கவனித்துக் கொள். அதைச் சொல்லிப் போகவே வந்தேன்."
நாகப்பன் நன்றியுடன் கைகூப்பினார்.
அதன்பின் அவர் மனம் கடன்பட்டவன் மனம் போலத் துடித்தது. மாணிக்கம் தந்தையின் நிலை பொறுக்காமல் வேறு ஊருக்குச் சென்று விடலாம் என்றபோது மறுத்தார்.கடனாளியாக இருந்து ஊரைவிட்டு ஓடத் தயாராக இல்லை.என்றார்.மாணிக்கம் தான் மட்டும் பட்டினம் சென்று ஏதேனும் வேலை தேடி சம்பாதிப்பதாகக் கூறிப் புறப்பட்டான்.
நகரத்துள் நுழைந்த மாணிக்கம் ஒரு நல்லவரைச் சந்தித்தான். அவரும் மாணிக்கத்தின் முகத்தில் தோன்றிய கள்ளமில்லாத் தன்மையைப் பார்த்துத் தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்துச்  சென்றார்.
அவரது பஞ்சு வியாபாரத்தை நன்கு கவனித்துக் கொண்டான்.கூடவே அவனது படிப்புக்கும் உதவி செய்தார் அந்தப் பெரியவர்.மாணிக்கத்திற்கு  பதினெட்டு வயதானதால்  இப்போது அவனால் தனியாகத் தேர்வு எழுத முடிந்தது.
மாணிக்கம் தேர்வில் வெற்றி பெற்றதைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்க விரும்புவதாகச் சொன்னதை ஏற்றுக் கொண்டார் அந்தப் பெரியவர்.
"மாணிக்கம், நீ இங்கு வந்து மூன்று வருடமாச்சு.உன்பெற்றோரைப் பார்க்கப் போகவேண்டியது உண்மைதான்.உனக்காக நான் இதுவரை சம்பளமாக எதுவும் கொடுக்கவில்லை.என் வியாபாரத்தில் நீ உழைக்கும் பங்குதாரராக இருக்கிறாய்.மூன்று ஆண்டுகளில் உன் பங்காக இந்த இரண்டு லக்ஷம் ரூபாயைத் தருகிறேன்.உன்தந்தையிடம் கொடுத்துவிட்டு சீக்கிரமே இங்கு வந்துவிடு."என்று கூறி அவனை அனுப்பிவைத்தார்.மகிழ்ச்சியுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்  கொண்ட மாணிக்கம் அவரை வணங்கி விட்டு அரசூருக்குப் புறப்பட்டான்.
ஊருக்கு வெளியே உள்ள குடிசையில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த நாகப்பன் மகனைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.
பெற்றோரை வணங்கி மகிழ்ந்தவன் அவர்களுக்கு வேண்டிய உணவு உடை இவற்றையும் தான் சம்பாதித்த இரண்டு லக்ஷத்தையும் கொடுத்தான். நாகப்பன் மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.
அப்போது "என்ன நாகப்பா, என்னைப் பார்க்கணும்னு சொன்னியாமே உன் மகன் மாணிக்கம்தான் அழைத்தான். என்ன விஷயம்?" 'என்றபடியே உள்ளே நுழைந்தார். அவருடன் நாகப்பனின் நிலையை அறிய இன்னும் இரண்டு மூன்று பேர் உடன் நுழைந்தனர்.
"வாங்கய்யா," என அழைத்த மாணிக்கம் தன் தந்தையின் கையில் பதினைந்தாயிரம் ரூபாயைக் கொடுத்து "அப்பா. இவருக்குப் பணம் திருப்பிக் கொடுக்க முடியலைஎன்னுதானே ராவும் பகலும் வருத்தப் பட்டீங்க. வட்டியோட அவருகிட்ட இந்தப் பணத்தை உங்க கையால குடுங்கப்பா"என்றான்.
அத்துடன்" இன்னொரு பத்தாயிரத்தைப் பள்ளிக்கூட வளர்ச்சிக்குக் குடுங்கப்பா. நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்திட்டீங்கப்பா. இனியாவது சந்தோஷமா இருங்கப்பா".என்றவன் தன் தந்தையின் காலடியில் அமர்ந்து கண்ணீர் விட்டான்.
சோர்ந்து முடங்கியாமர்ந்திருந்த நாகப்பன் புது தெம்புடன்  நிமிர்ந்து நின்றார்.பெருந்தனவந்தரும் மகிழ்ந்தார்.
"நாகப்பா இப்படிப்பட்ட மகனைப் பெற்ற நீ ரொம்பக் குடுத்து வச்சவனப்பா.இந்தமாதிரி அருமையான பிள்ளையைப் பெற நீ ரொம்பத் தவம் செய்திருக்கே."
உடன் வந்தவரோ"ஆமாம் நாகப்பா, நீ இதுவரை செய்திருக்கும் தான தருமந்தான் உன்பிள்ளை இவ்வளவு உயர்ந்தவனாயிருக்கக் காரணம்." வன்று வாயார வாழ்த்திச் சென்றனர்.
அவர்களின் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் தன் மகனை அணைத்துக் கொண்டார் நாகப்பன்.
பெற்றோரின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த மாணிக்கம் தன் தகப்பனார் பழையபடி சிறந்த உயர்ந்த இடத்தில் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் புறப்பட்டான்.
அவன் செல்வதைப் பார்த்த தனவந்தர்,  
                     மகன்தந்தைக்கு    ஆற்றும்   உதவி  இவன்தந்தை 
                     என் நோற்றான்   கொல்எனும்    சொல்.
இந்தக்குறளை மெய்ப்பித்துவிட்டான்  மாணிக்கம். உண்மையாகவே இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.என்றார் மகிழ்வுடன்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

95-மனவேளிச்சம்.

ஒரு ஊரில் ஒரு புடவை வியாபாரி இருந்தான்.அவன் ஊர் ஊராகச் சென்று புடவைகளை விற்று வந்தான்.புடவைகளுக்கு நியாயமான விலை சொல்லாமல் அதிக விலை சொல்லி மக்களை ஏமாற்றி வந்தான். அவனுக்கு தான் விரைவில் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற பேராசை அதிகமாக இருந்தது.புடவை மூட்டையைத் தன் தலையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் நடந்தே செல்வான்.அவ்வாறு ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் போது இடையில் ஒரு காடு இருந்தது.அந்தக் காட்டைத் தாண்டி அடுத்த ஊருக்குச் சென்று விடலாம் என்று நடந்தான்.
வெகு தூரம் நடந்தும் ஊர் தென்படவில்லை. அவன் ஓய்வு எடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான்.அவன் அமர்ந்த இடம் சற்று மேடாக இருக்கவே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தான் அங்கே ஒரு பானையைப் பார்த்தான் அந்தப் பானை நிறைய தங்க அவல் நிறைந்திருந்தது.
தங்கத்தால் ஆன அவல்உருவத்தில் புதையலைக் கண்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.
தன்னுடைய பணக்காரன் ஆகவேண்டும் என்னும் ஆசைக் கனவு பலித்தது கண்டு ஆனந்தக் கூத்தாடினான்.
தன் தலையிலிருந்த புடவை மூட்டையைக் கீழே வைத்தான்.அந்தப் புடவைகளை அந்த மரத்தின் அடியிலேயே போட்டுவிட்டு பானையில் இருந்த  தங்கத்தாலான  அவலைஎல்லாம் தன் மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டான்.அப்போது மரத்தின் மேலிருந்து ஒரு குரல் கேட்டது.அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தான் வியாபாரி.சல சலக்கும் மரத்தின் ஊடேயிருந்து அந்தக்  குரல் கேட்டது.
"ஏ வியாபாரியே ! இந்தப் பொன் உனக்குச் சொந்தமானதல்ல. ஒரு குருடனுக்குத்தான் இந்தப் புதையல் சேரவேண்டும்.உனக்கல்ல."
"நான்தானே பார்த்துத் தோண்டி எடுத்தேன். எனவே இது எனக்குத்தான் சொந்தம்.வேண்டுமானால் ஒரு பிடி அந்தக் குருடனுக்காகப்  போட்டு வைக்கிறேன்." என்றவன் ஒரு பிடியைவிடக் குறைவாக அந்தப் பானையில் போட்டு விட்டு நடந்தான்.அப்போது அந்தக் குரல் "ஏ வியாபாரியே, பாதிப் பொன்னையாவது போட்டுவிட்டுப் போ."என்று கெஞ்சியபடியே கேட்டது. "அதெல்லாம் முடியாது."என்றவன்  
யாரேனும் தான் வீசிய புடவைகளைப் பார்த்துவிட்டு நான்தான் புதையலை எடுத்திருக்கிறேன் எனத் தெரிந்து கொண்டுவிட்டால் என்ன செய்வது என எண்ணினான்.
அதனால் தான் வீசிய புடவைகளை அங்கேயே அருகில் ஓடும் ஆற்றில்  எறிந்தான்.மகிழ்ச்சியோடு வீடு நோக்கி நடந்தான்.
 அந்தக் காடு நீண்டு கொண்டே போனது.இருட்டும் நேரமும் வந்து விட்டது. ஊர் கண்ணுக்கே தென்படவில்லை.என்ன செய்வது என்று யோசித்தான்.தொடர்ந்து நடக்க அச்சமாக இருந்தது.கையிலோ பொன் மூட்டை நேரமோ இருட்டு. இருக்கும் இடமோ காடு. அவன் அச்சத்துக்குக் கேட்பானேன்.மனதில் தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு பதுங்கிப் பதுங்கி நடந்தான்.
நல்ல வேளையாக தொலைவில் சிறிய வெளிச்சம் தெரியவே வேகமாக நடந்தான்.இரவு தானும் தன் செல்வமும் பத்திரமாக இருக்கலாம் என எண்ணியபடியே அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். 
"அம்மா," எனக் குரல் கொடுத்தான். ஒரு வயதான அம்மாள் வெளியே வந்தாள்.
"யாரப்பா அது? உள்ளே வாருங்கள் "என்று அழைத்து உபசரித்தாள்.வியாபாரி தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டவன் பொன் கிடைத்ததைப் பற்றி மூச்சு விடவில்லை.இரவு மட்டும் தங்கிப் போவதாகச் சொன்ன போது அந்த அம்மாள் "நான் இந்த மாதிரி வழிப்போக்கருக்காகவே இந்த இடத்தில் தங்கியிருக்கிறேன்.இதை நான் ஒரு தரும காரியமாகச் செய்கிறேன்."என்றவள் வியாபாரி சாப்பிட வயிறார உணவு பரிமாறினாள்.உண்ட களைப்புடன் தன் மூட்டையை அங்கேயே ஓரமாக வைத்துவிட்டுத் தூங்கப் போனான் அந்த வியாபாரி.அவனுக்கு முன்னாலேயே அங்கு வந்த வேறொரு வழிப்போக்கரும் அங்கு தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து தன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான் அவன்.வெகு தொலைவு வந்தபின் பொன் மூட்டை லேசாக இருக்கிறதே நமது பொன் மூட்டை மிகவும்  கனமாக இருக்குமே என்று சந்தேகப் பட்டவன் மூட்டைக்குள் கையை விட்டு ஒரு பிடியை அள்ளிப் பார்த்தான்.ஐயோ, இதென்ன அத்தனையும் துவரம்பருப்பாக உள்ளதே கடவுளே, அந்தக் கிழவி என்னை ஏமாற்றி விட்டாளா என்று மீண்டும் அந்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றான்.
அவளிடம் தான் கொண்டு போன மூட்டை தன்னுடையது அல்லவென்றும் இன்னொரு மூட்டை இருக்கிறதா பாருங்கள் என்றபோது அந்த அம்மாள் "[இல்லையே அப்பா, உனக்கு அருகில் படுத்திருந்தவர்தான் அவருடைய மூட்டையைத் தூக்கிச் சென்றார்."என்றாள்.
"அவர்தான்  என் மூட்டையைப் பார்க்காமல் எடுத்துச் சென்றிருக்கிறார் அவர் எப்போது போனார்?" என்றான் வியாபாரி படபடப்புடன்.அதற்கு அந்த அம்மாள் சிரித்தாள். "ஐயோ பாவம், அவரால் எப்படிப் பார்க்க முடியும் அவர்தான் கண் தெரியாதவர் ஆயிற்றே."
"என்ன, கண்  தெரியாதவரா?அவர் எப்போது போனார்?"
"நீங்கள் தூங்கிய சற்று நேரத்துக்கெல்லாம் அவர் எழுந்து சென்று விட்டார்.நான்கூட நன்கு விடிந்தவுடன் செல்லலாமே என்று சொன்னேன்.குருடனுக்கு இருட்டானால் என்ன வெளிச்சமானால் என்ன.என் களைப்பு நீங்கிவிட்டது நான் சென்று வருகிறேன் என்று சொல்லிப் போய் விட்டார்.
புடவை வியாபாரிக்குக் கண்கள் இருண்டன.தள்ளாடியபடியே மீண்டும் அந்த புதையல் தந்த மரத்தடிக்கே வந்து அழுதான்.அப்போது அந்தக் குரல் கேட்டது."ஏ வியாபாரியே, நீ உனக்கென்று போட்டுவிட்டுப் போன தங்க அவல் இருக்கிறது. நீ அந்தக் குருடனிடம் புதையலைச் சேர்த்ததற்காக உனக்குக் கூலி.நீ நியாயமாக குருடனுக்கென்று பாதிப் பொன்னைப் போட்டிருந்தால் இப்போது அது உனக்குக் கிடைத்திருக்கும்.உன் பேராசையால், மற்றவர் சொத்துக்கு நீ ஆசைப் பட்டதால் மற்றவருக்கு அவரின் நியாயமான பங்கைக் கூடக் கொடுக்காததால் உனக்கேற்பட்ட நஷ்டத்தை இனியாவது தெரிந்து கொள்.இனி மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாதே.என் பணி முடிந்தது நான் போகிறேன்."என்று கூறிவிட்டு பெரும் காற்றாகி மறைந்தது அந்தக் குரலுக்குரிய பூதம்.
தன் தீய எண்ணங்களால் தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை இழந்ததற்காக அழுதுகொண்டே அந்த ஒரு பிடி பொன்னை எடுத்து மடியில் கட்டிக்கொண்டான்.தான் இழந்த தன் புடவைகளின் மதிப்புதான் தனக்குக் கிடைத்துள்ளது என்று மனதைத் தேற்றிக் கொண்டு நடந்தான் அந்த வியாபாரி. இருள் மறைந்து வெளிச்சம் பரவியது.அவன் உள்ளத்திலும்தான்.

.



ருக்மணி சேஷசாயி 




Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

94- திருக்குறள் கதைகள்..என்பும் உரியர் பிறர்க்கு

ஒருமுறை விருத்ராசுரன் என்ற அசுரன் பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்தான்.பல ஆண்டுகள் கடுந்தவமிருந்தான். அவனது தவத்திற்கு மெச்சிய பிரம்மா அவன் முன் தோன்றினார்.
மனமகிழ்ந்த விருத்ராசுரன் அவரை வணங்கி நின்றான்.
"விருதரா, உன் தவத்திற்கு மெச்சினேன். என்ன காரணத்திற்காக இந்தத் தவம் உனக்கு என்ன வேண்டுமோ கேள் "என்று அன்புடன் கேட்டார் பிரம்மா.
"சுவாமி, நான் என்றுமே சாகாதிருக்க அருள் செய்யுங்கள். இந்த வரம்தான் தேவை"என்றான் வேகமாக.
"விருதரா, உலகில் தோன்றியவை அனைத்துமே அழியவேண்டியது இயற்கை நியதி. அதை மாற்ற என்னால் மட்டுமல்ல மும்மூர்த்திகளாலும் ஆகாது.எப்படியெல்லாம் சாகக் கூடாது என்றுவேண்டுமானால் கேள். வரம் தருகிறேன்."என்றார் பிரம்மா.
சற்று சிந்தித்தான் அசுரன். பின்னர் "தேவா, நான் எந்த உலோகத்தாலான ஒரு ஆயுதத்தாலும் பஞ்ச பூதங்களாலும் உலகில் தோன்றிய எந்த உயிரினத்தாலும் நான் சாகக் கூடாது."என்று கேட்டுக் கொண்டான்.அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து மறைந்தார் பிரம்மா.
பிரம்மாவின் இந்த வரத்தால் மிகவும் கர்வம் கொண்ட விருத்ராசுரன் அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான்.யாராலும் அவனை வெல்ல இயலவில்லை.
மக்கள், ரிஷிகள் தேவர்களும் கூட அவனை வெல்ல முடியாமல் திகைத்தனர்.எந்த ஆயுதம் கொண்டு அவனைத் தாக்குவது சாகாவரம் பெற்ற காரணத்தால் அவனை வீழ்த்த இயலவில்லை.தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர். உலக உயிர்களின் துன்பம் கண்டு சிவன் அவர்களுக்கு அனுக்ரகம் செய்ய எண்ணினார்.தன் முன்னே பணிவுடன் நின்ற தேவேந்திரனைப் பார்த்து "தேவேந்திரா, மனமுவந்து யாரேனும் தனது எலும்பைக் கொடுத்தால் அதை ஆயுதமாக்கி அந்த அசுரனை நீ வென்று விடலாம்."என்றபோது மகிழ்ச்சியுடன் இந்திரன் "அப்படியே கொண்டு வருகிறேன் சுவாமி."என்று புறப்பட்டான்.
எலும்பைக் கொடுப்பார் யாரிருப்பார் என பூலோகம் முழுவதும் தேடி வருகையில் ஒரு மலை மீது ஒரு காலில் நின்றபடியே தவம் செய்யும் ஒரு ரிஷியைக் கண்டான்.அவரே ததீசி முனிவர்.
நேரே அவர் முன் சென்று நின்று கைதொழுதான்.வெகு நேரம் கழித்துக் கண் திறந்த ரிஷி ததீசி ஆச்சரியமாகப் பார்த்தார்.
"யாரது? தேவேந்திரனா என் முன் நிற்பது?"
"ஆம் மாமுனியே, தங்களால் ஆகவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது."
"என்ன வேண்டும் சொல் தேவேந்திரா."
"சுவாமி, லோக க்ஷேமத்துக்காக ஒரு அசுரனை வதைக்க வேண்டியுள்ளது அதற்கு ஆயுதமாக உபயோகிக்க ஒரு மனிதரின் முதுகெலும்பு வேண்டும்.உலக மக்களின் நன்மை கருதி தவம் செய்யும் தாங்கள்தான் அதற்கு உதவ வேண்டும்"
ரிஷி புன்னகை புரிந்தார்."இந்த உடல் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன் படுமாயின் மிக்க மகிழ்ச்சி.நான் என் தவ வலிமையால் நெருப்பில் என் உடலை எரித்துக் கொள்கிறேன்.பின்னர் அந்த சாம்பலின் உள்ளே இருக்கும் என் முதுகெலும்பை நீ எடுத்துச் செல். உனக்கு ஆசிவழங்குகிறேன்."
என்று கூறித் தன் உடலை எரித்துக் கொண்டார்.அந்த்சாம்பலின் ஊடே இருந்த முதுகெலும்பை எடுத்துக் கொண்டு இந்திரன் சிவனை நாடிச் சென்று கொடுத்தார்.
அனைத்தையும் அறிந்த சிவன் ததீசி முனிவருக்கு கைலாச பதவி அளித்தார். தேவேந்திரன் கொடுத்த முதுகெலும்பை வஜ்ராயுதம் என்னும் ஒரு ஆயுதமாக ஆக்கித் தந்தார்.அதைக் கொண்டு படை நடத்தி வெற்றி பெறுவாய் என்றும் ஆசி வழங்கினார்.
அந்த எலும்பாலான ஆயுதமே வஜ்ராயுதம். அதைக் கொண்டு படை நடத்தி விருத்ராசுரனை அழித்தான் இந்திரன்.
அன்புடையவர்கள் தங்களின் எலும்பையும் மற்றவருக்குக் கொடுப்பார்கள் என்ற உண்மையை இந்த கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.'
இதைத்தான் வள்ளுவரும்
                     "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
                       என்பும் உரியர் பிறர்க்கு." என்று கூறியுள்ளார்.
அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களும் தமக்கே உரியன என நினைப்பார்.ஆனால் அன்புடைய உயர்ந்த மனிதர் தனது உடமையையும் பிறர்க்குக் கொடுப்பார். உடமை மட்டுமன்றி தம் உடலோடு சேர்ந்த எலும்பையும் பிறர்க்குக் கொடுப்பார் அன்புடையோர்.
இப்படிப் பட்ட மனிதர்கள் நம் வாழ்வின் வழிகாட்டிகளன்றோ?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 20 ஜூலை, 2012

93--துவாரகா ராமதாசர்.

கிருஷ்ண பரமாத்மா  ஆட்சி செய்து வந்த துவாரகைக்கு அருகில் இருக்கும் ஒருஅழகிய  சிறிய கிராமம் டாஙகேர் என்பது. அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்தான் ராமதாசர் என்ற அந்தணர்.சிறந்த கிருஷ்ண பக்தர்.
இவர் அல்லும் பகலும் அந்த துவாரகைக் கண்ணனையே எண்ணி என்று அவன் அருள் கிட்டும் என ஏங்கி இருந்தார். அதனால் இவரை துவாரகா ராமதாசர் என அனைவரும் அழைத்தனர்.
ஒவ்வொரு ஏகாதசி அன்றும் துவாரகை சென்று விரதமிருந்து அன்று முழுவதும் கண்ணனையே பாடி பஜனை செய்வார்.. மறுநாள் துவாதசி அன்று ஏழைகளுக்கு தன்னால் இயன்ற அளவு உணவு தந்து பின்னர் இவர்  உணவு கொள்வார்.
-
காலம் சென்றது.ராமதாசருக்கு இப்போது வயதாகிவிட்டது. அவரால் முன்போல் நடந்து துவாரகைக்கு வர இயலவில்லை. அந்த நிலையிலும் இவர் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் தனது விரதத்தை விடாது  கடைப்பிடித்து வ்ந்தார்.
ஒருமுறை அவர் தளர்ந்தவாறு கோயிலுக்குள் அமர்ந்திருந்தார்.அவர் மனத்துக்குள்
ஸ்ரீ கிருஷ்ணன் புன்னகை புரிந்தவாறு நின்றிருந்தான்.மானசீகமாக அவருடன் பேசினார் ராமதாசர்.
"கண்ணா, என் உடல் மிகவும் தளர்ந்து விட்டது. அடுத்த ஏகாதசிக்கு என்னால் இங்கு வந்து உன்னைத் தரிசிக்க இயலுமோ இயலாதோ தெரியாது. ஆனால் கண்ணா, என்னால் இயலாவிடில் நீ வந்து எனக்கு தரிசனம் தரவேண்டும்.ஒரு போதும் தவறக்கூடாது கண்ணா,"என்றவாறு இறைவனின் காலடியில் விழுந்து விம்மி விம்மி அழுதார்.
இறைவனின் நெஞ்சம் உருகியது."தாஸ,அஞ்சாதே.என்னை உங்கள் ஊருக்கு அழைத்துச் செல்" கண்ணனின் இந்த  மொழியைக் கேட்ட ராமதாசர் திகைத்தார்.

"என்னால் எப்படி உன்னை அழைத்துச் செல்ல இயலும்."
"தாஸ, என்னுடைய தேர் வரும் அதில் ஏறிச் செல்லலாம்."

மகிழ்ச்சியுடன் கண்ணனுடன்  தேரிலேறி டாங்கேர் வந்து சேர்ந்தார் ராமதாசர்.  
கண்ணனை நடுக் கூடத்தில் இறக்கிவிட்டுத  தேர் மறைந்து போனது.
மறுநாள் பொழுது விடிந்தவுடன் துவாரகையின் கோயில் கதவுகள் திறக்கப் பட்டன. ஆனால் அங்கே கண்ணனின் விக்ரகத்தைக் காணோம்.அனைவருக்கும் ராமதாசர் மேல்தான் சந்தேகம் வந்தது.
உடனே கூட்டமாக அனைவரும் டான்கேர் நோக்கிச் சென்று ராமதாசரின் வீட்டின் முன் நின்று கூச்சலிட்டனர். ராமதாசர் அமைதியாக இருந்தார்.வந்தவர்கள் தாசரின் வீட்டுக்குள் புகுந்து கண்ணனைக் கண்டனர். அவரை மீண்டும் துவாரகை எடுத்துச் செல்ல முயன்றனர்.
கண்ணன் தன்னைப் பிரிவதைப் பொறுக்காத ராமதாசர் அழுதார்.அப்போது கண்ணன்
"தாஸ,என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்." அவர்கள் என்னை இங்கேயே விட்டுச் செல்வார்கள்."என்றான் புன்னகைத்தபடியே. ஆசையுடன் தாசர் அர்ச்சகர்களிடம் கேட்டார்.
"இறைவனின் எடைக்கு எடை பொன் தந்தால் இந்த இறைவனை எனக்குக் கொடுப்பீர்களா?"
அர்ச்சகர்கள் சிரித்தனர்."நீரோ அன்னக் காவடி.தினமும் உஞ்சவிருத்தி செய்து உண்பவர்.
இந்த இறைவனின் எடைக்கு துலாபாரமாகப் பொன் தருவாயா?" என்று கேலி பேசினர்.
அதற்குள் ஊர் மக்கள் அங்குக் கூடிவிட்டனர்.
விக்ரகத்தின் எடைக்கு எடை பொன் தருகிறாராம் தாசர், என்று மக்கள் பேசிக் கொண்டே நின்று வேடிக்கை பார்த்தனர்.அர்ச்சகர்களும் தாசரின் பேச்சைக் கேட்டு சிரித்தபடியே சம்மதித்தனர்.தாசரால் இயலாத காரியம் கண்ணனின் எடைக்குப் பொன் தருவது என நம்பினர்.
அவரின் விருப்பப்படியே தராசு நிறுத்தப் பட்டது.ஒரு தட்டில் கிருஷ்ண விக்ரகம் வைக்கப் பட்டது.'அன்று ருக்மிணி தேவியின் மெய்யன்பை நிரூபிக்க தராசில் ஏறினேன். இன்று இந்த தாசனுக்காக தராசில் ஏறுகிறேன்.'என்று சொல்வதுபோல் நகைத்தபடி நின்றிருந்தான் கண்ணன்.
ராமதாசர் வீட்டினுள் நுழைந்தார். தன் மனைவியுடன் வெளியே வந்தவர் கையில் ஒரு மூக்குத்தி இருந்தது.தாசரின் கையில் ஒன்றும் இல்லாதது கண்டு அர்ச்சகர்" தாசரே, எங்கே பொன்? என்று கேட்டனர்."

இதோ இருக்கிறது என்று தன் கையிலிருந்த மூக்குத்தியைக் காட்டினார்.பின் அதை இறைவனை எண்ணித் தராசில் இட்டார். என்ன ஆச்சரியம்! அனைவரும் வியக்கும் வண்ணம்
ஒரு மூக்குத்தியின் எடைக்குச் சமமாகக் கண்ணனின் எடை நின்றது.
மக்கள் ஆரவாரம் செய்தனர்.என்னே தாசரின் பக்தி. அவரது பக்திக்குக் கண்ணனே திருவுள்ளம் இரங்கியுள்ளான்.இவரே பரம பக்தர் என அனைவரும் அவரை வணங்கினர்.
அர்ச்சகரோ வாயடைத்து நின்றார்."தாசரே, இறைவனுக்கே இங்கு வாசிக்கத்தான் விருப்பம்போலும் .நீர் பெரும் பாக்யசாலி. உமது பக்தி உலகினருக்கு ஒரு படிப்பினையாகும்
என்று நிலத்தில் விழுந்து கண்ணனுடன் சேர்த்து தாசரையும் வணங்கினார்.
பலன் நோக்காப் பக்தியால் இறைவனையே அழைக்க முடிந்தது தாசரால். 
இவரது பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற உண்மையை நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 14 ஜூலை, 2012

92-நம்பிக்கையின் சிறப்பு.

ஒரு ஊரில் ஒரு பண்டிதர் வாழ்ந்து வ்ந்தாr.அவர்  பெரும்   கல்விமானாக இருந்தார்.சமஸ்கிருத மொழியில் மிகவும் பண்டிதராக விளங்கினார். தினமும் ஊரிலுள்ள மக்களுக்கு   பாகவதக்
கதைகளைச் சொல்லி வ்ந்தார்.
.அவ்வூரிலுள்ள மக்களும் இவர் சொல்லும் கதைகளைப  பிரியமாகக் கேட்டு வந்தனர்.
அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தும் மக்கள் இவரைக்  கதை கூறும்படி தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு நாள் இவர் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு திருடன் திருடுவதற்காக உள்ளே நுழைந்தான். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவே கூட்டத்தோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான்.
அன்று பாகவதம் பத்தாவது சர்க்கம். கிருஷ்ண லீலை பற்றியும் கிருஷ்ணரின் அழகை வர்ணித்தும் கதை கூறினார். அந்தக் கதையில் மெய்மறந்து அமர்ந்திருந்தான் திருடன்.
கதை முடிந்து கூட்டமும் கலைந்தது.
பண்டிதரும் தனக்குக் கிடைத்த தட்சணைப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். சற்றுத  தொலைவு நடந்தவுடன் திருடன் அவரைப் பின் தொடர்ந்தான்.அவரிடம் இருந்த பணத்தைத் திருட எண்ணி அவர் முன் சென்று அவரை வழி மறித்தான். அச்சத்துடன் தன் பணத்தைக்  கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பண்டிதர் "ஏனப்பா. நான் ஏழை என்னிடம் இருக்கும் சிறு தொகையால் உனக்கு எந்தப் பயனும் இல்லை. பணக்காரராகப் பார்த்துப் போயேன்."என்றார் நடுங்கியபடியே.
திருடன் சிந்தித்தான்."அப்படியானால் நீ கதையில் சொன்னாயே, அந்த ராஜகுமாரன், அவன் எங்கிருக்கிறான் சொல்.அவனிடம் அவன் அணிந்திருப்பதாக நீ சொன்ன நகைகளைக் களவாடிக் கொள்கிறேன்"என்றான்.
பண்டிதர் சிந்தித்தார்.கதையிலே தான் சொன்ன கிருஷ்ணனின் அலங்காரத்தைப் பற்றித்தான் இவன் கேட்கிறான் என்று புரிந்து கொண்டார்.கண்களை மூடி கண்ணனை வேண்டிக்கொண்டார்."கண்ணா, ஆபத்திலிருந்து நான் தப்பிக்க உன் பெயரைக் கூறுகிறேன்.
அருள்செய் கண்ணா"என்று வேண்டிக்கொண்டு.திருடனைப் பார்த்துச் சொன்னார்.
"ஆமப்பா, அந்த ராஜகுமாரன் இந்த ஊருக்கு வடக்கே ஐந்து கல் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்கு மாடுகளை மேய்த்துக் கொண்டு வருவான்.அங்கே ஒரு பாறை இருக்கும் அருகே ஒரு புன்னைமரமும் இருக்கும்.அங்குதான் மாடுகளை மேய விடுவான்."
"சரி அவன் வருகிறான் என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது?"
"அவன் வரும்போதே சுற்றிலும் மணம் வீசும் புல்லாங்குழலின் ஓசை கேட்கும். அப்போது அவன் வருகிறான் என்று நீ தெரிந்துகொள். சமயம் பார்த்து அவன் நகைகளைக் களவாடிக் கொள்."என்று சொன்னதைக் கேட்டு திருடன் மனம் மாறினான்.
"அப்படியானால் சரி.அவனிடம் நிறைய நகைகள் நீ சொன்னபடி கிடைத்தால் உனக்கும் பங்கு தருகிறேன்.இல்லையேல் மீண்டும் உன்னைத் தேடி நான் வருவேன்.நீ போகலாம் "
பண்டிதர் திருடன் நம்மைத் தேடி மீண்டும் வருவதற்குள் நாம் வேறு ஊருக்குப்போய் விடலாம் என்று என்ணிக் கொண்டே வேகமாக அங்கிருந்து நடந்தார்.
திருடனும் வடதிசையில்  பண்டிதர் சொன்ன இடத்தை அடைந்தான்.அவன் மனம் முழுவதும் அந்தச் சிறுவனின் தோற்றமே நிறைந்திருந்தது.அந்த ராஜகுமாரன் எப்போது வருவான் என்று ஆவலே வடிவாய் புதர் மறைவில் ஒளிந்திருந்தான்.
அதிகாலை நேரம் சற்றும் தளராமல் கண்ணனையே  எண்ணி அவன் எப்போது வருவான் எப்போது வருவான் என திசையெங்கும் சுற்றிப் பார்த்து அமர்ந்திருந்தான் அந்தத் திருடன். பசி தாகம் தூக்கம் எதையும் அவன் லட்சியம் செய்யவில்லை.வெள்ளி முளைத்தது. புள்ளினங்கள் கூவத் தொடங்கின. "என்ன இன்னும் அந்தச் சிறுவனைக் காணோமே" என்று ஏங்க ஆரம்பித்தான் திருடன்.
திடீரென்று அவன் மூக்கு நல்ல மணத்தை நுகர்ந்தது. மெல்லிய குழலோசையும் கேட்கவே அருகே இருந்த மரத்தின் மேல் ஏறி தொலைவில் பார்த்தான். அழகே வடிவாக உடம்பு நிறைய நகைகளுடன் அந்தக் கண்ணன் தெரிந்தான். வேக வேகமாக மரத்தைவிட்டு இறங்கி புதரில் மறைந்து கொண்டான்.
மாடுகளை மேயவிட்டு குழல் ஊதி யபடி புன்னை மரத்தடியில் அமர்ந்தான் அந்த ராஜகுமாரன்.
உடனே அவன் முன் தோன்றிய திருடன் அவன் முன் சென்று "ஏய் சிறுவனே உன் நகைகளைக் கொடுத்துவிடு.இல்லையேல்..."என்று மிரட்டினான்.
"வேண்டுமானால் நீயே கழற்றிக் கொள்"என்றான் கண்ணன் புன்னகையுடன்.
திருடன் வேகமாக நகைகளைக் கழற்றத் தொடங்கினான்.ஆனால்கண்ணனின்  உடலைத் தொட்டவுடன் மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தான். உள்ளமும் உடலும் பரவச நிலையை அடைந்ததை உணர்ந்தான்.
அவன் முன் நின்று கூர்ந்து பார்த்தான்."நீ யாரென்று தெரியவில்லை ஆனால் உன் நகைகளைக் கழற்ற மனம் வரவில்லை. உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது. தினமும் இதே  நேரம் வந்து நான் உன்னைப் பார்ப்பேன். நீயும் வரவேண்டும். உன் நகைகளைக் காணவில்லை என்றால்   உன் பெற்றோர் உன்னைக் கோபிப்பார்கள். வேண்டாம் "என்று கண்ணனின் முன்  அமர்ந்து அவனையே பார்க்கத தொடங்கினான் திருடன்.
"பரவாயில்லை எடுத்துக் கொள்.எங்களிடம் இன்னும் நிறைய நகைகள் உள்ளன. நாளைக்கும் தருகிறேன் "என்றபடி நகைகளைக் கொடுத்தான்.
பதில் சொல்லத் தோன்றாமல் தன்னிலை மறந்து அவைகளைப் பெற்றுக் கொண்டு ஊருக்குள் ஓடி வந்தான் அந்தத் திருடன்.
நேராக பண்டிதர் வீட்டை அடைந்தான்.அவரிடம் கண்ணன் நகைகள் கொடுத்ததைக் கூறி நகைகளைக் காட்டினான்.பண்டிதரால் நம்பமுடியவில்லை. ஆனால் நகைகளைப் பார்த்து நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
"அந்தச் சிறுவன் எங்கே இருக்கிறான் காட்டு" என்றபடி அவனுடன் ஓடினார் பண்டிதர். அதே மரத்தடியில் அமர்ந்து குழலிசைத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.
"அதோ பாருங்கள்."திருடன் காட்டிய திசையில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.
"அய்யோ என் கண்ணுக்கு நீ தெரியவில்லையே கண்ணா மணிவண்ணா இந்தப் பாமரன் செய்த புண்ணியம் நான் செய்யவில்லையா. உன்னையே சதாகாலமும் ஜபித்துக் கொண்டிருக்கும் எனக்கு தரிசனம் கொடு." பண்டிதர் அழத் தொடங்கினார். கண்ணன் புன்னகையோடு நின்றிருந்தான்.
திருடனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.கண்ணன் அவன் கையைப் பற்றினான்.திருடனின்
அஞ்ஞானம் விலகியது. உடல் புல்லரிக்க கண்களில் நீர் மல்க கண்ணனின் பாதத்தில் வீழ்ந்தான்.
"ஐயா, பண்டிதரால்தான் உன் தரிசனம் எனக்குக் கிடைத்தது. அவருக்கும் உன் திவ்ய தரிசனத்தைக் காட்டு." என்று வேண்டிக் கொண்டான்.
"அப்படியானால் அவரது கையை நீ பற்றிக் கொள்."என்றான் கண்ணன். பண்டிதரின் கையைப் பற்றிக் கொண்டான் திருடன்.
நீலமேக வண்ணனாக அலங்கார சொரூபனாக அருள் பொங்கும் முகத்துடன் காட்சி கொடுத்தான் கண்ணன்.
அவர் உள்ளத்தில் தோன்றிய சந்தேகத்தைப் புரிந்து கொண்டு பேசினான் கண்ணன்.
"பண்டிதரே. உங்களுக்கு  பாண்டித்தியம் இருக்கிறது ஆனால் பக்தி இல்லை. ஆனால் திருட வந்தாலும் நம்பிக்கையும் என்னைக் காணவேண்டும் என்ற ஆசையும் கொண்டு காத்திருந்த இந்தப் பாமரனே உம்மை விட மேலானவன்.  இந்த நம்பிக்கை உம்மிடம் இல்லாததுதான் என் தரிசனம் உமக்குக் கிட்டத் தாமதமாயிற்று."
என்று கூறி இருவருக்கும் ஆசி கூறி மறைந்தான் கண்ணன்.
திருடனும் தன் திருட்டுத் தொழிலைவிட்டுபண்டிதரையே தனகுருவாகக கொண்டான். இருவரும் இறைவனின் தொண்டு செய்து   இனிதே வாழ்ந்தனர்.
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 7 ஜூலை, 2012

91. நீதிபதியின் திறமை.

 

                  ஒரு ஊரில் ஒரு வட்டிக் கடைக்காரர் இருந்தார்.அவரது பெயர் காஞ்சனன். அந்த ஊரிலேயே பெரும் பணக்காரராக இருந்தார். ஊரிலுள்ளோர் யாவரும் அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கிச் செல்வர்.அவர்களிடம் காஞ்சனன் பெரும் பொருளை வட்டியாகப் பெற்று வ்ந்தார்.
                   ஒருமுறை அந்த ஊரில்  மழையே பெய்யவில்லை.அதனால் ஏழை விவசாயிகள் சிலர் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் தங்களின் கஷ்டம் தீர காஞ்சனனை அணுகினர்.வழக்கம் போல அவரும்  பெரும் தொகையை வட்டியாகப் பெற்றுக்  கொண்டு கடன் கொடுத்தார்.. அந்தக் கடனை ஓராண்டுக்குள் அடைத்து விடுவதாகவும் அப்படிச் செய்யாவிடில் காஞ்சனனின் விருப்பத்துக்குத் தக்கபடி தண்டனை அனுபவிப்பதாகவும் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தனர். எப்படியும் ஓராண்டுக்குள் விளைச்சல் மூலம் அவரது  கடனை அடைத்து விட முடியும் என்றே அனைவரும் நம்பினர்.  அவர்களுள் காமேஷ் என்ற வாலிபனும் இருந்தான்.
                   இந்த காமேஷ் என்ற வாலிபன் பெயருக்கேற்றபடி அனைவரிடமும் அன்பும் இரக்கமும் காட்டி அனைவரின் மனத்திலும் நல்ல மதிப்பைப் பெற்றிருந்தான். காஞ்சனனுக்கு காமேஷ் மீது மிகவும் பொறாமை. பெரும் செல்வந்தனான தன் மீது கூட இத்தனை அன்பைச் செலுத்தாத மக்கள் இவன் மீது மட்டும் இத்தனை அன்பைப் பொழிவானேன். மேலும் தன்னிடம் இவன் மட்டும் கடன் வாங்காமல் காலம் கழிக்கிறானே என்றும் அவன் மீது பொறாமை கொண்டிருந்தான். அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
                    பல விவசாயிகளுடன் சேர்ந்து வந்து காமேஷும் கடன் கேட்கவே நல்ல சந்தர்ப்பம் என்று அனைவருக்கும் கடன் கொடுத்து உதவுவதுபோல் காமேஷுக்கும் கொடுத்தான். ஆனால் மறக்காமல் தன் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டான் காஞ்சனன்.எல்லோரையும் போலவே காமேஷும் எப்படியும் ஓராண்டுக்குள் பணத்தைக் கட்டிவிடலாம் என எண்ணி காஞ்சனனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான்.
ஆனால் அந்த ஆண்டும் பயிர் செய்ய முடியாமல் வானம் பொய்த்து விட்டது. அத்தனை விவசாயிகளும் பெரும் துன்பத்துடன் காஞ்சனனை அணுகினர். அவர்களின் நிலை கண்டு காஞ்சனன் மிகவும் மகிழ்ந்தான். எப்படியாவது காமேஷை தண்டித்து அவனைக் கொன்று விடவேண்டும் அல்லது ஊரைவிட்டு விரட்டிவிட வேண்டும் என்பதே காஞ்சனனின் எண்ணமாக இருந்தது.
ஊர் மக்கள் அனைவரும் காஞ்சனனை சந்தித்தனர்.வானம் பொய்த்ததை எடுத்துச் சொல்லி இன்னும் ஓராண்டு கழித்துப் பணம் தருவதாகச் சொன்னபோது காஞ்சனன் சம்மதிக்கவில்லை.அவர்கள் சொன்ன கெடுவுக்குள் பணம் தராவிடில் அவரவருக்குச் சொந்தமான நிலங்களை என்னிடம் ஒப்படைக்கவேண்டும் இல்லையேல் காமேஷின் மார்பிலிருந்து ஒரு கிலோ சதையை  வெட்டித் தரவேண்டும் என்று வழக்குத் தொடுத்தார். வழக்கு நீதிபதியின் முன் சென்றது.
வழக்கைக் கேட்டமக்கள் அனைவரும் தங்கள் நிலத்தைக் கொடுத்து காமேஷின் உயிரைக் காக்க முன் வந்தனர். ஆனால் காமேஷ் அவ்வாறு செய்வதைவிட தான் ஒருவன் அனைவரின் வழ்வுக்காக உயிர் விடுவது சிறந்தது என்று முடிவு செய்தான்.நீதிபதியிடம் அனைவரின் கடனுக்காகத் தன் உடலிலிருந்து ஒரு கிலோ சதையை வெட்டித் தரச் சம்மதித்தான். அவனது நல்ல உள்ளத்தையும் காஞ்சனனின் பொறாமை உள்ளத்தையும் நீதிபதி புரிந்து கொண்டார்.
அவர் மிகவும் யோசித்தார். காமேஷின் உயிரைக் காப்பதோடு காஞ்சனனுக்கும் தண்டனை தர விரும்பினார். பேராசையும் பிறரைத் துன்புறுத்திவாழும் எண்ணமும் கொண்ட காஞ்சனனுக்குப் புத்தி புகட்ட விரும்பினார்.
வழக்கை நன்கு விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்."காஞ்சனரே, இத்தனை மக்களின் நிலத்தையும் உமது கடனுக்கு ஈடாக நீர் கேட்பது நியாயமே. ஆனால் அதற்குப் பதிலாக காமேஷின் இதயத்திலிருந்து ஒரு கிலோ சதையைக் கேட்பது என்பது சரியல்ல. தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்."
"இல்லையில்லை. எனக்கு காமேஷின் இதயத் தசை ஒருகிலோ கொடுத்துவிட்டால் அத்தனை பேரின் கடனையும் நான் தள்ளுபடி செய்து விடுகிறேன்"
"உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? வார்த்தை மாறமாட்டீர்களே?"
"கண்டிப்பாக மாறமாட்டேன்.ஒரு கிலோ சதையை நானே அறுத்து  எடுத்துக் கொள்கிறேன்."
"சரி. இத்தனை பேரும் பட்ட கடனுக்காக காமேஷின் ஒரு கிலோ சதையை காஞ்சனன் அறுத்து எடுத்துக் கொள்ளட்டும்."என்று தீர்ப்பளித்தவுடன் காமேஷிடம் அன்பு கொண்டவர்கள் அழுது புலம்பினர்.ஆனால் காஞ்சனன் மிகவும் மகிழ்ச்சியோடு தராசு கத்தி சகிதமாக அருகே வந்தான்.அவன் முகத்தில்  மகிழ்ச்சியும் பலநாள் எண்ணத்தைத் தீர்த்துக் கொள்ளும் வெறியும் தெரிந்தது. அதை அருகே இருந்த நீதிபதியும் கவனித்தார்.
ஆவலோடு காமேஷின் அருகே கத்தியோடு நெருங்கிய காஞ்சனனைப் பார்த்து,"நீ ஒரு கிலோ சதைதானே கேட்டாய். அதற்குமேல் ஒரு கிராம் கூடவோ குறைவாகவோ நீ வெட்டக் கூடாது.. அதுமட்டுமல்ல. ஒரு துளி ரத்தம் கூட சிந்தக் கூடாது.இதை நினைவில் கொள். உன் விருப்பப்படி சரியாக ஒரு கிலோ சதையை ரத்தம் சிந்தாமல் வெட்டி எடுத்துக் கொள். என்றார். காஞ்சனன் திகைத்தார். மக்கள் கோஷம் போட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அளவாக ஒருகிலோ வெட்டுவது அதுவும் ரத்தம் சிந்தாமல் முடியுமா. ஏமாற்றத்துடன் கத்தியைக் கீழே போட்டுவிட்டு
ஏமாற்றத்துடன் நின்றார.
"காஞ்சனன் செய்த சூழ்ச்சிக்காகவும், அவன் காமேஷைக் கொல்ல எண்ணியதற்காகவும் அவனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன்."என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.நீதிபதியின் திறமையை அனைவரும் பாராட்டினர்.
ஒருவனைக் கெடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுமானால் அது நம்மையே அழிக்கும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 23 ஜூன், 2012

90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.

.
ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு மகன் பிறந்தான்.தவமிருந்து பெற்ற பிள்ளை என்று சபாபதி மிகவும் செல்லமாக வளர்த்தார். அதனால் அந்தச் சிறுவன் மிகவும் கர்வமும் அடங்காப் பிடாரித் தனமும் கொண்டு வளர்ந்தான்.
ஒரு நாளைக்குப் பத்துத்தரமாவது "கதிர்வேலு  கதிவேலு" என்று தன் மகனை அழைக்காமல் இருக்கமாட்டார் சபாபதி.இதுமட்டுமல்லாமல் அவன் பள்ளியில் செய்து விட்டு வரும் விஷமங்களை எல்லாம் கண்ணன் செய்த திருவிளையாடல் போல் ரசித்தார்.அவன் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டித் திருத்தாது  மன்னித்து மறந்து வந்தார். அதனால் கதிர்வேலு மிகவும் பொல்லாத்  தனத்துடன்  வளர்ந்தான்.
சில வருடங்கள் கழிந்தன.கதிர்வேலுவின் கெட்ட செயல்களும் வளர்ந்தன. நிறைந்த செல்வம் இருந்ததால் அவன் செய்யும் தீய செயல்களையெல்லாம் செல்வ பலத்தால் மறைத்துவந்தான்.
சாகும் தருவாயில் சபாபதி மகனிடம் இனியேனும் யார் வம்புக்கும் போகாமல் தான் சேர்த்து வைத்திருக்கும்  நிறைந்த செல்வத்துடன் சுகமாக இரு என்று அறிவுரை சொன்னார்.
ஆனால் சபாபதி இறந்த பிறகும் கதிர்வேலு தன் தீய குணங்களை விடவில்லை.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவா?
இவன் அடிக்கடி தவறு செய்து விட்டு நீதிமன்றம் வருவதும் செல்வ பலத்தால் தண்டனை பெறாமல் தப்புவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.அவ்வூர் நீதிமன்ற நீதிபதி இவனுக்கு எப்படியும் தண்டனை
வழங்கி அதை இவன் அனுபவிக்கும்படி செய்யவேண்டும் என நினைத்தார்.ஆனால் பொய் சாட்சிகளை வைத்து குற்றங்களிலிருந்து மீண்டு விடுவான்.
ஒரு முறை அவ்வூரில் இருந்த விவசாயிக்குக் கடன் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்டான்.அவன் நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்டான்.வழக்கு நீதி மன்றத்திற்குச் சென்றது.
                நீதிபதி வழக்கை விசாரித்தார். இதை நேரில் பார்த்ததாகச் சொன்ன  விவசாயியை அழைத்து வந்து விசாரித்தார்.அவனும் கதிவேலுவிடம் பணம் வாங்கிக் கொண்டு பொய்சாட்சி சொல்வதற்காக நீதிபதிமுன் நின்றான்.
அப்போது கதிர்வேலுவின் பணியாள் கட்டுக் கட்டாகப் பணத்தைக் கதிர்வேலுவிடம் கொடுப்பதை நீதிபதி கவனித்தார். இவன் அபராதப் பணத்துடன் வந்துள்ளான்.எனவே இவன் குற்றம் செய்தவன் என்பது தெரிகிறது. இம்முறை இவனைத் தப்பவிடக்கூடாது என முடிவு செய்தார்.
கதிர்வேலு அழைத்து வந்திருந்த பொய் சாட்சியை  நீதிபதி விசாரணை செய்தார். அந்த விவசாயி பலநாட்களாக மனதுக்குள் கதிர்வேலுவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.அதனால் நீதிபதியிடம் உண்மையைக் கூறியதோடு தனக்கு அவன் லஞ்சம் கொடுத்துக் கூட்டிவந்ததையும் கூறினான்.
"பொய் சாட்சி சொல்ல பணம் வாங்கிக் கொண்டாயா?"
"ஐயா, மன்னிக்கணுங்க.நான் பணம் வாங்கினது நிஜம் ஆனா,நான் வரலையின்னா வேறே ஆள் வந்து இவனுக்கு சாதகமா சாட்சி சொல்லிடுவானே. அதனால நானே வந்திட்டனுங்க.இதோ இருக்குதுங்க அவரு கொடுத்தபணம்."என்று ரூபாயை நீதிபதியிடம் கொடுத்தான்.
நீதிபதி கதிர்வேலுவிடம் "இப்போது உன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா இல்லையா?"என்று கேட்க கையும் களவுமாகப் பிடிபட்டதால் கதிர்வேலு அமைதியாக நின்றான்.
"நீ செய்த குற்றத்திற்கும் லஞ்சம் கொடுத்து பொய் சாட்சியை அழைத்து வந்ததற்கும் உனக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."என்றார்.அதுவரை கவலையோடு நின்றிருந்தவன் நீதிபதியின் இந்தச் சொற்களைக் கேட்டு முகம் மலர்ந்தான்."ஐயா,இந்தக் குற்றத்துக்கு நீங்க எவ்வளவு வேணும்னாலும் அபராதம் விதிங்க ஐயா.நான் இப்பவே கட்டிடறேன். "என்றான் கர்வமாக.
அவன் மடியில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததே அதுதான் காரணம். நீதிபதி புன்னகையுடன்,
"நீ யாரிடமும் கேட்கக் கூடாது. உன்கையிலிருந்து பணத்தைக் கட்டவேண்டும் .பிறகு பின்வாங்கக் கூடாது."என்றார்.
சரியென்று தலையை அசைத்தான் கதிர்வேலு.
"அப்படியானால் ஒரே ஒரு பைசாவை அபராதமாகக் கட்டிவிட்டுப்போ.இல்லையென்றால் ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும்."
திடுக்கிட்ட கதிர்வேலு தன் பையைத் துழாவினான்.சட்டை மடியென எங்கு தேடியும் அவனுக்கு ஒரு பைசா கிடைக்கவில்லை. நோட்டுக் கட்டுக்களாக இருந்தனவே தவிர ஒரு பைசா காசு  அவனுக்குக் கிடைக்கவே இல்லை.
புன்னகை புரிந்த நீதிபதி,"இப்போது ஒரு பைசா உனக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பார்த்தாயா.அதுபோலத்தான் மனிதர்களுக்குள் ஏழை என்றும் எளியவன் என்றும் துச்சமாக எண்ணி அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. இந்த உண்மையை சிறைவாசம் செய்தபிறகாவது புரிந்து நடந்துகொள். உன்னைத் திருத்தத்தான் இந்த சிறைத் தண்டனை."என்றார்.
அதுநாள் வரை தான் தவறாக நடந்து வந்ததற்காக வருந்தியபடியே சிறைச்சாலைக்குச் சென்றான் கதிர்வேலு.
இனி அவன் திருந்திவிடுவானல்லவா?
ஒரு பைசாதானே என எளிதாக எண்ணியதால் அதுவே அவன் சிறைசெல்லக் காரணமாக அமைந்தது. ஏழைகள் என்று பிறரை எண்ணி ஏளனமாக நடத்தியதால் குற்றவாளியென்று நிரூபிக்கப் பட்டான்.
அதனால் உருவத்தைப் பார்த்தும் செல்வ நிலையை வைத்தும் மனிதரை நாம் மதிப்பிடக் கூடாது.
இதையே வள்ளுவரும்,
       " உருவுகண்டு  எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
          அச்சாணி அன்னார் உடைத்து"   
என்றார்.
ஒரு தேரின் அச்சாணி சிறிதாக இருந்தாலும் அதன் பயன்பாடு மிகப் பெரிதன்றோ.அதனால் உருவத்தைப் பார்த்து யாரையும் மதிப்பிடக் கூடாது.செல்வத்தின் பெருமையை ஒரு பைசாவின் மூலம் கதிர்வேலுவும் தெரிந்து கொண்டிருப்பான்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 19 ஜூன், 2012

89- எவ்வுயிரும் நம் உயிரே. திருக்குறள் கதைகள்

.
ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார்.அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு.
அதைக் கண்களைத் திறந்த முனிவர் பார்த்தார்.புன்னகை புரிந்தார்.
"உனக்கு என்ன வேண்டும்?"
"சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன்.அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொண்டது.அதைப் பார்த்துப் புன்னகை புரிந்த முனிவர்,
"நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும்.உனக்கு அடுத்த பிறவியில் நல்ல உயர்ந்த பிறவி கிட்டும்" என்று உபதேசித்து ஆசிகூறினார்.
அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி விடைபெற்றது.
சில நாட்கள் கழிந்தன.காட்டில் திரிந்த பாம்பு தைரியமாக ஊருக்குள் வந்தது.நாம்தான் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே.அதனால் நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.
அதனால் அந்தப் பாம்பு ஊரின் ஓரமாக உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடிக்கொண்டு  இருந்தது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள்.அந்த நல்ல பாம்பு யாரையும் லட்சியம் செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது.ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே வந்து சூ., சூ எனக் குரல் கொடுத்து அந்தப் பாம்பை விரட்டினர்.
அப்போதும் அந்தப் பாம்பு தன் வழியிலேயே போய்க் கொண்டு இருந்ததைக் கண்டு சிறுவர்களின் பயம் சற்று விலகியது."டேய், பாம்புக்குக் கண் தெரியலை போல இருக்குடா.,நம்மளைப் பார்த்தும் அது ஓடாமல் மெல்லப் போகுதுடா!"என்றான் ஒருவன் அதைக் கேட்ட மற்ற சிறுவர்களுக்கு பயம் அறவே நீங்கியது. பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர்.சில கற்கள் பாம்பின் மீது பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.
அப்போதும் பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. சற்று நேரம் சிறுவர்கள் அந்தப் பொந்தின் முன் நின்று கூச்சல் போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
பாம்பு இரவானதும் அந்த இடத்தை  விட்டு வெளியே வந்து தன் இருப்பிடமான காட்டை நோக்கிச் சென்றது.அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயம்.ரத்தம் சிந்தும் உடலை வலியுடன் நகர்த்திக் கொண்டு சென்று முனிவர் முன் நின்றது.
அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர்,"என்னவாயிற்று?ஏன் இப்படி காயப் பட்டு வந்திருக்கிறாய்?"என்று அன்போடு வினவினார்.
துக்கம் தொண்டையை அடைக்க கூறியது பாம்பு. "சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று  ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன்.அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாடவந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள்."என்று கூறிக் கண்ணீர் விட்டது.
அதன் பரிதாப நிலைக்கு இறங்கிய முனிவர் அதன் காயத்துக்கு மருந்து போட்டபடி பேசினார்.
"உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். நீ உன் பிறவிகுணத்தைக் காட்டவேண்டியதுதானே?"
பாம்புக்குப் புரியவில்லை.அது "என்ன சுவாமி சொல்கிறீர்கள்?"என்று கேட்டது.
"ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன்."
"உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள் சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே"
புன்னகையோடு அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக்  கூவியவாறு ஓடினர்.
மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என  சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர்.பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு.அதே போல் தனக்கு தீமை  ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.
இந்தக் கருத்தையே வள்ளுவரும் கூறுகிறார்.
"தீப்பால  தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை  அடல்வேண்டா  தான்."
எவனொருவன் தீமையின்றி வாழ நினைக்கிறானோ அவன் யாருக்கும் தீங்கு செய்யாதிருப்பானாக. என்கிறார்.இக்கருத்தை நாம் பாம்பின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொண்டோமல்லவா?
"எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணியிருக்கும்" உயர்ந்த வாழ்வைப் பெற்று இன்புற்றிருப்போம்.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 10 ஜூன், 2012

88- பிறர் பொருளை விரும்பாதே. -திருக்குறள் கதைகள். --

சன்னாசிக்கிழவன் களைப்போடு வீட்டுக்குள் நுழைந்தான்.நடுவீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தான்.ஆகாயத்திலிருந்து நிலாவெளிச்சம் பளீரென்று வீட்டுக்குள் அடித்தது.பெருமூச்சு விட்டவாறே தன் முண்டாசை உதறித் தரைமீது போட்டுக் கீழே அமர்ந்தான்.
"என்னாப்பா, மோட்டுவளையைப் பாக்குறே?எதாச்சும் பணம் கொட்டுமான்னு பாக்குறியா?"
என்றவாறே அவன் மகன் சின்னச்சாமி உள்ளே நுழைந்தான்.
"பணம் கொட்டுதோ இல்லையோ மழை வந்தா தண்ணி கொட்டும்."
" ஆமாம்பா, இந்த மழைக் காலம் வாரதுக்குள்ளே நம்ம வீட்டை இடிச்சுக் கட்டிடணும் அப்பா.".
"எனக்கும் ஆசைதான். ஆனா அதுக்கு  நீ சொன்ன மாதிரி பணம் கூரையிலேந்து கொட்டினாத்தான் உண்டு."
"ஏம்பா அப்பிடிச் சொல்றே.வீட்டக் கட்டிடணும் அப்படீங்கற எண்ணத்தோட உழைச்சா கட்டாயம் நம்மாலே முடியும் அப்பா."
இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பச்சையம்மா "சரி சரி நேரத்தோட சோறு திங்க வாங்க. கெனா அல்லாம் அப்பால காங்களாம்" என்றாள் சலிப்போடு.
தந்தையும் மகனும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றார்கள்.
மறுநாள் பொழுதோடு எழுந்து வேலைக்குச் சென்றான் சன்னாசி.அந்த ஊர் பூங்காவில் பழுது பார்க்கும் வேலையில் அவன் ஒரு தோட்டக்காரனாக வேலை பார்த்து வந்தான்.
முதல்நாள் விடுமுறை தினமாதலால் நிறைய பேர் பூங்காவுக்கு வந்து சென்றிருந்தனர்.பூங்கா முழுவதும் குப்பையும் கூளமுமாக இருந்தது.அதைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தான் சன்னாசி.
செடியைக் கொத்தி சீர் படுத்தும் போது அதனுள்ளே பளபளவென்று தெரியவே என்னவென்று எடுத்துப் பார்த்தான்.இரண்டு சவரன் தேறும் ஒரு தங்கச் சங்கிலி.
சட்டென அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான்.ஏதும் அறியாதவன்போல் வேலையில் ஈடுபட்டான்.
சற்று நேரத்தில் அழுது கொண்டிருக்கும்  ஒரு சிறுமியைக் கையைப் பிடித்து இழுத்து வ்ந்தார் அவள் தந்தை.அவளிடம் கடுமையாகக் கேட்டார். "எங்கே விளையாடினே?இங்கேயா, இங்கேயா, சொல்லித்தொலையேன்.தேடிப்பார்க்கலாம்."என்றவர் நான்கு தோட்டக்காரர்களையும் விசாரித்தார்.
"யாராவது ஏதேனும் நகை கிடப்பதைப் பார்த்தீர்களா?"
யாரும் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டனர். சன்னாசிக் கிழவனும் தன் தலையைப் பலமாக இல்லையென்று ஆட்டிவிட்டான்.கண்களில் நீர் நிறைய "அய்யோ  ஆசையாக வாங்கியது போச்சே.
இந்தக் கடனை அடைக்க நான் இன்னும் எத்தனை கஷ்டப் படணுமோ."என்று புலம்பியவாறே தன் பெண்ணை இழுத்துக் கொண்டு வெளியேறினார் அந்த அப்பாவி அப்பா.
சன்னாசிக்குப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் இதையெல்லாம் பார்த்தால் நாம் கல்லு வீட்டில் உக்கார முடியுமா என்ற எண்ணமும் கூடவே தோன்றியது.
வேகவேகமாக வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று அந்தச் சங்கிலியை பத்திரப் படுத்தி வைத்தான்.
ஒரு வாரத்தில் சன்னாசி நினைத்தவாறே கல்லு வீடு எழும்பத் தொடங்கிற்று. சின்னச்சாமிக்கும் அவன் அம்மாவுக்கும் ஆச்சரியம்.என்ன கேட்டும் சன்னாசி "ஆண்டவன் கொடுத்தாண்டி" என்று சொல்லி அவள் வாயை அடைத்து வந்தான்.
ஒரு மாதம்  ஓடிவிட்டது.வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது.ஈரமான தலையைத் துடைத்தவாறே உள்ளே நுழைந்தான் சின்னச்சாமி.
"ஏண்டா தம்பி இம்மா நேரம்? வேலை எதுவும் கெடைக்கலியா?"
 "அதில்லம்மா, ஒரு பெரியவரு பார்க்குல உக்காந்திருந்தாரு. எழுந்து போகையில பொட்டிய மறந்து வச்சுட்டுப் போயிட்டாரு.அதை எடுத்துக்கினு அவரு வீட்டத் தேடி கொண்டுபோய் கொடுத்திட்டு
வாரதுக்குஇம்மா நேரமாயிடுச்சம்மா."
சன்னாசி மெதுவாக,"அது என்னா பொட்டிடா?"என்று கேட்டான்.
"அது எனக்குத் தெரியாதுப்பா"
"பொழைக்கத் தெரியாத புள்ள"என்றபடியே வெளியே சென்றான் சன்னாசி.
வெளியே லேசாகத் தூறிக்கொண்டிருந்தது திடீரென்று பெரும் மழை பிடித்துக் கொண்டது.நடு இரவில் வெளியே ஒரே கூச்சலாயிருந்தது  கேட்டு சன்னாசி சின்னச்சாமி அவன் தாய் பச்சை  அனைவரும் கதவைத் திறந்து பார்த்தனர்.வெளியே இருந்த குடிசை வீடுகள் எல்லாம் மழையில் அடித்துச் செல்லவே மக்கள் அனைவரும் தங்கள் உடமைகளோடு அருகே இருந்த பள்ளியை நோக்கி ஓடித் தஞ்சம் புகுந்தனர்.
சன்னாசி தான் கல்லு வீட்டில் இருப்பதால் மிகவும் பெருமையோடு மீண்டும் வந்து பாயில் படுத்துக் கொண்டான்.
ஒரு மணி நேரம் போயிருக்கும். திடீரென்று பச்சையம்மா "அய்யோ! எந்திரிங்க வீட்டுக்குள்ளாற தண்ணி வந்திருச்சு" என்று அலறியவாறே சன்னாசியை உலுக்கி எழுப்பினாள். அதற்குள் வீட்டுக்குள் மளமளவென தண்ணீர் உயரத் தொடங்கவே செய்வதறியாமல் உயிருக்கு அஞ்சி ஊர் மக்கள் அனைவரும் தங்கியிருக்கும் பள்ளிக்கூடத்திலேயே மூவரும் தஞ்சம் புகுந்தனர்.
சிறிய பள்ளிக்கூடம் மக்கள் ஏற்கனவே நிறைந்திருந்ததால் சன்னாசி குடும்பத்திற்கு ஒண்டிக் கொள்ளத்தான்  இடமிருந்தது.மீதி இரவை நின்று கொண்டே கழித்தனர் சன்னாசியும் அவன் மகன் மனைவியும்.
மறுநாளும் மழை விடவில்லை. வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது.வாயிலில் வெள்ளமாகத் தண்ணீர் ஓடியது.பலரது வீடுகள் நீரில் மிதந்து செல்வதைக் கண்டும் செய்வதறியாது அனைவரும் புலம்பிக்கொண்டு நின்றிருந்தனர்.
திடீரென்று சன்னாசியும் கதறினான்.அவனுடைய கல்லுவீட்டின் கதவு மிதந்து சென்றதை கண்டுதான் அலறினான்.யாருக்கு யார் சமாதானம் செய்வது.
அரசு கொடுத்த உணவை உண்டு அன்று பொழுது கடந்தது.மாலை நேரம் சற்றே மழை விட்டதும் அணைத்து ஆண்களும் தங்கள் வீட்டில் உடமைகள் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என்று பார்க்க வீட்டுக்குச் சென்றனர்.சன்னாசியும் ஓடினான்.அந்தோ, பரிதாபம்.அங்கே அவன் கட்டியிருந்த வீடு இடிந்து மண்மேடாகக் காட்சியளித்தது.
அப்படியே சரிந்து அமர்ந்தான்.அவன் பின்னால் வந்த சின்னச்சாமி அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தான்.
அப்போது ஒரு பெரியவர் வண்டிநிறைய துணிமணிகள் போர்வை ஆகியவற்றுடன் உணவுப் பொட்டலங்களும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்து நின்றார்.இன்னும் தூறல் நின்றபாடில்லை. இருப்பினும் பள்ளியில் ஒதுங்கியிருந்த மக்கள் அனைவரும் உணவுப் பொட்டலத்துக்காக ஓடி வந்தனர்.
அவர்களை வரிசையில் வரும்படி பணியாளர்கள் கூறிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்தபடியே நின்றிருந்த பெரியவர் தன் முன்னே சின்னச்சாமியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார்.
"ஏய் தம்பி, நீதானே அன்னிக்கி என் பொட்டியைக் கொண்டுவந்து கொடுத்தது."அவரைப் பார்த்து வணக்கம் கூறினான் சின்னச்சாமி.
"ஏம்பா, பொட்டியக் குடுத்துட்டு சொல்லாம போயிட்டியே. உன்னை எங்கெல்லாம் தேடினேன்."
"ஏனுங்க ஐயா?என்னை ஏன் தேடினீங்க?"
"உன் பேர் என்ன சொன்னே,  ஆங் சின்னச்சாமி.எவ்வளவு பெரிய உதவி செஞ்சுட்டு நீ பாட்டுக்குப் போயிட்டியே.உனக்கு ஏதானும் பரிசு குடுக்கணுமே அப்படின்னுதான் தேடினேன்."
"ஐயா, உங்க பொட்டியக் கொண்டாந்து குடுத்ததா பெரிய வேலைன்னு சொல்றீங்க.அது என்ன பெரிய காரியமா?"
"ஆமாம் சின்னச்சாமி அம்பது லட்ச ரூபா சொத்து அந்தப் பொட்டில இருந்துது.அதனாலே உனக்கு நான்கடமைப் பட்டிருக்கேன்."
சின்னச்சாமி திகைத்து நின்றிருந்தான்   "சின்னச்சாமி, இந்த இருபதாயிரத்தை  வாங்கிக் கொள். பாவம், மழையில் வீடிழந்து இருப்பாய்.இதை வைத்து கொள். உனக்கு உதவியாக இருக்கும். மழை நின்ற பிறகு என்னை வந்து பார்."என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்.
தன் மகனின் கையில் ரூபாய் நோட்டுக்களைப் பார்த்த சன்னாசிக்குப் பேச நா எழவில்லை.
அவன் மனம் தான் செய்த செயலையும் தன் மகன் செய்த செயலையும் எண்ணிப் பார்த்தது.ஒரு 'ஏழைத் தந்தை அழ அவரது பொருளைத் தான் எடுத்துக்  கொண்டதால்தான் தான் அழ அந்தப் பொருள் தன்னை விட்டுச் சென்று விட்டது.என்ற உண்மையும் ஒரு நல்ல வழியில் வந்த பொருள் நாம் இழந்து விட்டாலும்  நம்மை வந்து அடைந்தே தீரும்' என்ற அறிவும் அவன் உள்ளத்தைச் சுட்டது. அவன் மனம் திருந்தியது போல் வானம் பளீரென ஒளிவிடத் தொடங்கியது.
வள்ளுவரின் வாக்கு எத்தனை சத்திய வாக்கு!
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
 பிற்பயக்கும் நற்பா லவை."
                                  
இந்த உண்மையை அனைவரும் அறிந்து கொண்டால் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி கண்ட ராமராஜ்யம் நம் கண் முன்னே தோன்றுமே.





                                                                        


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com