புதன், 29 செப்டம்பர், 2010

49th story.மாறிய மனம்.

                                                                      மாறிய மனம்.
பரமசிவம் அவன் பெற்றோருக்கு ஒரே பையன். மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான்.அவன் அப்பா அவன் கேட்டதையெல்லாம் வாங்கித்தருவார். அவன் அம்மாவோ சாப்பிட அவன் விரும்பியதையெல்லாம் செய்து தருவார்.  அதனால் கஷ்டம் என்பதே என்னவென்றே அறியாமல் வாழ்ந்து வந்தான்.
அவன் அம்மா காய்ச்சலால் துன்பப்படும்போது கூட கவலைப்படாமல் தனக்கு வேண்டிய தின்பண்டத்தைச் செய்து தரச் சொல்லி ரகளை செய்வான்.
             அவன் மனம் எப்போதும் எதைப் பற்றியும் கவலைப் பட்டதே இல்லை.அவனும் யாரையாவது துன்பப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவான் .நாய் கல்லடிபட்டு நொண்டிச் செல்வதையும், ஓணான் கயிற்றில் கட்டப்பட்டுத் துடிப்பதையும் பார்த்து மகிழ்வான்.அந்த ஊரில் அழகு தரும் பொன்னியாறு ஓடிக்கொண்டிருந்தது.சிறுவர்கள் விடுமுறை நாட்களில் அந்த ஆற்றில் நீந்திக் குளிப்பது வழக்கம். வயிறு பசிக்கும்போதுதான் வீட்டு நினைவு வரும். அதுவரை நீந்திக் கொண்டிருப்பார்கள்.
             அன்று ஞாயிற்றுக்கிழமை. பரமசிவம் அவன் நண்பர்களுடன் ஆற்றங்கரைக்கு வந்தான். உச்சி வேளையாதலால் ஆற்றில் கூட்டமில்லை. ரவி என்ற பையன் "டேய், கூட்டமில்லாமல் இருக்கு. நல்லா நீந்தலாம்டா. வாடா குளிக்கலாம்." என்றபடியே ஆற்றில் இறங்கினான். ராமு "ஊஹூம், நான் மாட்டேன். எனக்கு நீந்தத் தெரியாது."என்றபடியே தள்ளி நின்றான். அந்த ஆண்டுதான் அவர்கள் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். அவன் அப்பா ஒரு வங்கி அதிகாரி.  
ஆனால் பரமசிவம் அவன் கையைப் பற்றி இழுத்தான்."பயப்படாதே. நான் உனக்கு நீந்தக் கத்துக் குடுக்கறேன். வா"  ராமுவுக்கும் அவர்களைப்போல நீருக்குள் அமிழ்ந்து விளையாட ஆசையாக இருந்ததால் மெதுவாக ஆற்றில் இறங்கினான். பத்து நிமிடமாக அவனை இழுக்க முயற்சித்தவனுக்குத  திடீரென அவனைத் துன்புறுத்திப் பார்க்க ஆசை வந்துவிட்டது. முழங்கால் அளவு நீரில் நின்றவனை கையைப் பற்றி இழுத்து நீருக்குள் தள்ளிவிட்டான்.
பயந்து போன ராமு பதறியபடி எழ முயன்றான்."டேய், இப்படியெல்லாம் பண்ணாதே....." என்றபடியே பயத்துடன் கரையை நோக்கி நடந்தான் .அவனை பரமசிவம் மீண்டும் இழுத்து நீருள் தள்ளினான்."ஆ, ஆ, என வாயைப் பிளந்தபடியே நீருக்குள் தவிக்கும் ராமுவைப் பார்த்துச் சிரித்தான் பரமசிவம்.
அவனது தவிப்பைப் பார்த்து ரசித்தான். தன்னைக் காத்துக் கொள்ள ராமு படும் துன்பத்தைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தான். 
அப்போது ரவி பரமசிவத்தின் காதில் நீரை ஊற்றவே அவனிடம் சண்டைக்குப் போனான். அந்தசமயம் ராமு கரையேறி மணலில் படுத்துக் களைப்பைப் போக்கிக் கொண்டான்."சே, என்ன நண்பன் இவன், உயிருக்குப் போராட வைத்து விட்டானே. இனிமேல் இவனுடன் சேரவே கூடாது." என்று எண்ணியவன் தன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் பின்னால் பரமசிவம் "டேய், பயந்தாங்குளி ஓடுடா ஓடு..." என்று சிரிப்பதை ராமு பொருட்படுத்தவேயில்லை.
             ஐந்து  நாட்கள் கழிந்தன. அன்று சனிக்கிழமை. பள்ளி பிற்பகல் விடுமுறை.சாப்பிட்டுவிட்டு ஊரைச்  சுற்றி வந்தான் பரமசிவம். தெருக்கோடியில் ஒரு வீடு. அது ஒரு கிட்டங்கி.வீடு முழுவதும் வெல்ல மூட்டைகளை அடுக்கியிருப்பார்கள். வீட்டு வாயிலில் வெல்ல வாசனை கும்மென்று அடிக்கவே மெதுவாக உள்ளே நுழைந்தான். உள்ளே  வெல்லம். அச்சு வெல்லம் பனைவெல்லம், மண்டைவெல்லம், என வகை வகையாகப் பார்த்தவனுக்கு நாக்கில் நீர் ஊறியது வெல்ல கட்டிகளை எடுத்துத் தன் பாக்கெட்டில் நிரப்பிக் கொண்டான். வேண்டியமட்டும் தின்றான். திடீரென்று அவன் மீது ஏதோ விழுந்தது. பயந்து போனவனாய் "ஐயோ, அம்மா "என அலறினான். மேலும் இரண்டு எலிகள் மேலே விழவே துள்ளி ஓடினான். இரண்டு எலிகள் அவனைக் கீறிவிட்டு ஓடின. பயந்து போன பரமசிவம் அறையை விட்டு வெளியே வந்தான். வீடு ஒரே இருட்டாய் இருப்பதைப் பார்த்து மேலும் பயந்தான்."ஐயோ, இதென்ன இவ்வளவு இருட்டா இருக்கு. கொஞ்ச நேரம் முன்னே வெளிச்சம் இருந்துதே!. இப்போ வாசற்படியே தெரியலியே.ஐயோ, அம்மா,  அம்மா..."அலறினான் பரமசிவம். அவனையும் வெல்ல மூட்டை என எண்ணிய எலியும் பெருச்சாளியும் அவன் மேலே விழுந்து கீறின.உடம்பில் எரிச்சல். மனதில் பயம், காற்றில்லாததால் திணறினான். அவன் வரும்போது திறந்திருந்த கதவை அவன் உள்ளே இருக்கும் போது யாரோ மூடிவிட்டுச் சென்று விட்டார்கள். இதை உணர்ந்து கொண்ட பரமசிவன் அலறினான்."யாராவது என்னைக் காப்பாத்துங்க. பயமா யிருக்கு யாராவது வாங்க.ஐயோ, அம்மா..."வெகுநேரம் அலறியவாறு இருந்தான். வியர்வையில் அவன் சட்டை முழுவதும் நனைந்து விட்டது.
வெல்லம் சாப்பிட்டதால் மிகுந்த தாகமும் ஏற்பட்டது. இருட்டறையில்  தண்ணீர் எப்படிக் கிடைக்கும்? ஒரு நிமிடம் போவது கூடக் கடினமாக இருந்தது.அப்போதுதான் அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது.
"காற்றுக்காக நான் இப்போது தவிக்கிறேனே இப்படித்தானே ராமுவும் அன்று தவித்திருப்பான். மீண்டும் மீண்டும் அவனை நீருக்குள் தள்ளி வேடிக்கை பார்த்தேனே. அவனின் துன்பம் கண்டு சிரித்தேனே....கடவுளே! நான் செஞ்சது தப்புதான். என்னை மன்னிச்சுடு. இனிமேல் யாரையும் துன்புறுத்த மாட்டேன். என்னைக் காப்பாத்து." மனமிரங்கி  அழுதான். கதவைத் தேடிப் பிடித்து படபடவெனத் தட்டினான்.
          திடீரெனக் கதவு திறந்தது. இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர். பாதி மயக்கத்தில் சரிந்து உட்கார்ந்திருந்த பரமசிவத்தைப் பார்த்து அவனைத் தூக்கி வெளியே அமர்த்தினர்."நீ ஏண்டா உள்ளே போனே? வெல்லம் திருடவா?"
"வேற எதுக்குப் போவான் படிக்கவா போவான்?"
"ஏலே, வெல்லம் திருடி! உங்கம்மா உன்னைக் காணோமின்னு ரொம்ப நேரமா தேடிக்கிட்டிருக்காங்க. நீ இங்க வந்து மாட்டிகிட்டிருக்கே பொறியிலே அகப்பட்ட எலி மாதிரி."
"நல்ல வேளை பூட்டு சரியாப்பூட்டியிருக்கான்னு பாக்க வந்தது நல்லதாப்போச்சு. இல்லையின்னா  நாளைக்கு ஞாயித்துக்கெழமை பூராவும் இவன் உள்ளாறவே இருந்துருக்கணும். ஏலே, பெருச்சாளி எலி கடிச்சுதாலே?"
"ஆமா."பரமசிவம் அழுதுகொண்டே சொன்னான்.வெளிக்காற்று உடம்பில் பட்டதும் புத்துணர்ச்சி பெற்றான்.
"அண்ணாச்சி.வெல்லம் தின்கிற ஆசையிலே உள்ளே போயிட்டேன்.மன்னிச்சுடுங்க இனிமே இப்படிச் செய்ய மாட்டேன்."சிவந்த கண்களைத் துடைத்தவாறே சொன்னான் பரமசிவம். 
"போடா, போய் உங்கம்மாவைப் பாரு. பாவம் எங்கெங்கயோ தேடிக்கிட்டு இருக்காங்க. இந்தா. இந்த வெல்லக்கட்டியை எடுத்துக்கிட்டுப் போ."
ஒரே ஓட்டமாக ஓடினான் வீட்டுக்கு. ஊரெங்கும் தேடி விட்டு பிள்ளையைக் காணோமென்று அழுதுகொண்டிருந்த அம்மாவின் மடியில் தலை வைத்துக கொண்டவனுக்கு தான் எவ்வளவு துன்பப் பட்டோம் என்பது புரிந்தது.
அம்மாவின் மடி அவனுக்கு சுவர்க்கமாக இருந்தது.
மற்றவர் துன்பத்தை நினைத்துப் பார்க்காததால்தான் துன்பப் படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியைக் கண்டேன். இனி அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்வேன்.யாரையும் கஷ்டப்படுத்தவே மாட்டேன்.என்று அம்மாவின் மடியில் தலைவைத்தவன் தனக்குள் உறுதி பூண்டான்.
பரமசிவனின் மனம் மாறியதை அறியாமலேயே அவன் கிடைத்து விட்டதற்காக மகிழ்ந்தார் அவன் அம்மா.
முற்பகல் செய்யின் பிற்பகல்  விளையும் என்பதைப் புரிந்து கொண்டான் பரமசிவம்.
யாருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அப்படி விளைவித்தால் நமக்கும் அத்துன்பம் வந்துசேரும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
                                             " பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா 
                                              பிற்பகல் தாமே வரும்."     என்ற வள்ளுவரின் திருக்குறளையும் மறக்கலாகாது.









                

Blog: http://chuttikadhai.blogspot.com