சனி, 28 ஆகஸ்ட், 2010

44th story. jayavijayar.

                            ஜெயவிஜயர் .
இறைவனைக் காண நம்பிக்கையே சிறந்த வழி என்பதை பிரகல்லாதனின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது. ஒருமுறை மகாவிஷ்ணுவின் பாதங்களை வருடியபடி மகாலட்சுமி அமர்ந்திருந்தாள். அப்போது சனகாதி முனிவர்கள்  நாராயணனைக் காண வந்தனர்.அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள் வைகுண்டத்தின் காவலர்களான ஜெயனும் விஜயனும்.
அதனால் கோபமடைந்த சனகாதி முனிவர்கள் பூலோகத்தில் பிறவி எடுத்து உழல்வீர்களாக என்று சபித்தனர்.அதைக்கேட்டு வருந்திய ஜெயனும் விஜயனும் . நாராயணனிடம் தஞ்சமடைந்தனர். நாராயணரும் அவர்களுக்கு அபயம் அளித்தார். "பக்திமான்களாக இருந்து ஏழு பிறவிகளில் என்னை வந்து அடைவீர்களா? எனக்குப் பகைவர்களாக இருந்து மூன்றுபிறவிகளில் என்னை  வந்து அடைவீர்களா?" என்று கேட்டார், ஜெயா விஜயர்கள் பதை பதைத்தனர். ஏழு பிறவிகள் தங்களை விட்டுப் பிரிந்திருப்பதா? எங்களால் முடியாது. தங்களின் பகைவனாக இருந்தாலும் விரைவில் வைகுந்தம் வருவதையே விரும்புகிறோம் " என்றனர். நாராயணரும் அவ்வாறே வரமளித்தார்.
அதன் காரணமாகவே முதல் பிறவிஹிரண்யகசிபு,ஹிரன்யாக்ஷகன் எனவும், இரண்டாவது பிறவி இராவணன், கும்பகர்ணன், எனவும் மூன்றாவது பிறவி சிசுபாலன், தந்தவக்ரன் எனவும் பிறவிகள் எடுத்து இறைவனை பகைவனாக எண்ணி வாழ்ந்தனர்.அசுரவம்சத்தில் பிறந்து  தேவாதி தேவர்களை அடிமைப் படுத்தி ரிஷிகளைக்கொடுமைப் படுத்தினர். இவர்களில் முதல் பிறவியில் பிறந்த ஹிரன்யாக்ஷகன் மிகவும் கொடுமைவாய்ந்தவனாக இருந்தான்.
தேவர்களையும் ரிஷிகளையும் கொடுமைப் படுத்தியதோடு தானே இறைவன் எனவும் கூறிக் கொண்டான். மூன்று லோகங்களுக்கும்தானே அதிபதி என்று முடிவு செய்து அனைவரையும் ஆட்டிப் படைத்தான்.
கர்வம் மிகக் கொண்டு வைகுண்டத்திற்கு ஹரியைத்தேடிப்போனான். அங்கே ஹரியைக் காணாமல் எங்கே ஹரி என்று எங்கும்தேடினான்.பாபாத்மாவான ஹிரன்யாக்ஷகன் கண்களுக்கு ஹரி தெரிவானா? எங்கு தேடியும் ஹரியைக் காணாத கோபத்தில் பூமியை தூக்கி பாதளத்தில் அழுத்தினான்.பூமிதேவி வருந்தி  ஹரியை சரணடைந்தாள்.
 நாராயணன் வராக அவதாரம் எடுத்தான். பூமியைத் தன் மூக்கினால் தூக்கி அதன் இடத்தில் நிறுத்தினான். ஹிரன்யாக்ஷகன் கோபத்துடன் நாராயணன் மீது பாய்ந்தான். அவனுடன் போரிட்டு அவனைவதம்செய்தான் நாராயணன்.
ஹிரண்யகசிபு தன் தம்பி வருவான் எனக் காத்திருந்தான். அவன் வதம் செய்யப்பட்ட செய்தி கேட்டு வெகுண்டான். தன் தம்பியைக் கொன்ற ஹரியைத் தேடிச் சென்றான். எங்கும் ஹரியைக் காணாமல் திகைத்தான்.சாகாவரம் பெற்றாலே ஹரியுடன் போரிட்டு அவனை வெல்ல முடியும் என முடிவு செய்தான்.ஆகவே பிரம்மாவைக் குறித்து கடுந் தவம் மேற்கொண்டான். பலஆண்டுகள் தவமியற்றினான் ஹிரண்யகசிபு. அவன் மனைவி கயாது என்பவள் தேவர்கள் அரசனான இந்திரனுக்கு அஞ்சி நாரதரின் ஆசிரமத்தில் மறைந்து வாழ்ந்தாள். நாரதர் நாராயண. நாராயண, எனக் கூற அதைக் கேட்டுக் கொண்டிருந்த கயாது உறங்கி விட்டாள். உடனே அவள் வயிற்றிலிருந்த குழந்தை ம்...ம்...எனக் கேட்கத் தொடங்கியது. நாரதர் மனம் மகிழ்ந்தார். இக்குழந்தையால் உலகில்  பக்தி மணம் பரவும் என ஆசி கூறினார். அவனே பிரகல்லாதன் என்னும் அவதார புருஷன். விடாமுயற்சியும் நம்பிக்கையும் நினைத்ததை முடித்து வைக்கும் என்ற உண்மையை இவர்களின் வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
பிரஹல்லாதனின் வரலாற்றை அடுத்த கதையில் பார்ப்போம்.